வடகிழக்கை புலிகளே ஆள வேண்டும்; அது விரைவில் நடக்கும்!விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள் தான் ஆள வேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று  (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“தற்போதைய தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு கடிதம் ஒன்றை தமிழரசுகட்சியின் தலைவர் சேனாதிராஜாவிடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் வைத்து வழங்கியிருந்தோம். அது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனும், தலைமையிடமும் கதைத்துவிட்டு பதில்சொல்வதாக கூறியிருந்தார். எனினும் இன்றுவரை அந்தவிடயம் தொடர்பாக எமக்கு எதனையும் அறிவிக்கவில்லை.

நாம் பெரிய நிபந்தனைகளை அவர்களிடம் முன்வைக்கவில்லை. ஏனையகட்சிகள் மற்றும் பல சுயேட்சைக்குழுக்கள் வாக்குகளை உடைக்கும் நோக்குடன் களம் இறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிழைகளை விட்டாலும் எமது பாரம்பரிய கட்சியான கூட்டமைப்பை பலப்படுத்துவதை நோக்காக கொண்டும், அவர்களது வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடகிழக்கில் எமது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களை வழங்க வேண்டும் என்றவிடயத்தை நாம் புரிந்துணர்வு கடிதத்தில் முன்வைத்திருந்தோம்.

அந்த கடிதத்திற்கு இரண்டு மாதங்கள் கழிந்தும் சேனாதிராசா எமக்கான முடிவினை அறிவிக்கவில்லை. சந்திப்போம் என்று காலங்களை மாத்திரமே அவர் கடத்திக் கொன்டிருந்ததுடன், உண்மையான போராளிகளான எங்களை அவர் உதாசீனப்படுத்திவிட்டார். இந்த இக்கட்டான தேர்தல் காலத்தில் எம்மை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் இனிவரும் காலங்களில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் குறுக்காலபோன போராளிகள் என்ற வார்த்தையை சொல்லியிருந்தால் அதனை நாம் மறுதலிக்கின்றோம். போராளிகளிற்கு ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் நாம் குறுக்கே போகாமல், நேராக பயணிப்போம். எமக்கு ஒரு கட்டமைப்பு இல்லாததன் காரணத்தினாலேயே போராளிகள் குறுக்கே திரிகின்றார்கள்.

கூட்டடைப்பு எம்மை பலவீனமாக நினைக்கின்றது. ஆனால் இன்னும் 5 – 10 வருடங்களில் நாங்கள் தான் பலமாக வரப்போகின்றோம். விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த வடகிழக்கை புலிகள்தான் அரசியல் அங்கிகாரத்துடன் ஆளவேண்டும்.

அதனை நாம் உருவாக்குவோம் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்வதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பை அடையாளம் இல்லாத நிலைக்கு நாம் தள்ளிவிடுவோம். அந்தளவுக்கு நாம் வேலைசெய்வோம்” – என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்