தமிழ் பிரதிநிதிகளை பெறவேண்டுமாயின் கைக்கூலிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்!

 

மாற்று இனங்களால் தமிழ் மக்களுக்கு ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை பெறவேண்டுமாயின் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்ற கைக்கூலிகளுக்கு வாக்களிக்கக் கூடாதென பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவர் இரா.துரைரெத்தினம் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்கள் வாழுகின்ற பிரதேசம் பௌத்த பிரதேசம் எனவும்,எமது சமூகத்தை நிருவகிப்பதற்கு பௌத்த நிருவாகத்தை ஆளுமைப்படுத்த முயல்வதும், அதிகார பங்கீடு தொடர்பாக எச்சரிப்பதும், எதிர்காலத்தில் தமிழர்களை அடிமைகளாக வாழ வைக்கும் திட்டமாகும்.

இத்திட்டங்களை முறியடிப்பதற்கு தமிழர் பிரதிநிதித்துவம் அவசியமாகும். இப்பிரதிநிதிகளை குறைப்பதன் ஊடாக எம்மை பலவீனப்படுத்தவதற்கு இம் மாவட்டத்தில் பல குழுக்களுக்கு நிதிகளை வழங்கி பல குழுக்களை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளனர்.

குறிப்பாக, அற்பசொற்ப வாக்குகளை எடுக்கக் கூடிய பல குழுக்கள் தேர்தலில் இறங்கி எழுபத்தையாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பல கூறுகளாகப் பிரித்து நான்காவது தமிழ் பிரதிநிதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வரக்கூடிய வாய்ப்புகளை இல்லாமல் செய்து ஐந்து பிரதிநிதிகளில் இரண்டு பிரதிநிதிகளை மாற்றுச் சமூகத்திற்கு வழங்கக் கூடிய வழிவகைகளை ஏற்படுத்துகின்றனர்.

இதை வலுச்சேர்ப்பதற்கு மத்தியிலுள்ள இனவாதிகள் பல கோடிக்கணக்கான நிதிகளை வழங்கி தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.

இதை முறியடிப்பதற்கு உதிரிகளாக தேர்தல் களத்தில் குதித்துள்ளவர்களுக்கு வாக்களிப்பதை நிறுத்தி நான்காவது ஆசனங்களை பெறக்கூடிய தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பெற்ற ஒரு இலட்சத்து இருபத்தேழாயிரம் வாக்குகளுடன் சேர்த்து மேலதிகமாக ஏழாயிரம் வாக்குகள் அளிக்கும் பட்சத்தில் நான்கு தமிழ் பிரதிநிதிகளைப் பெறமுடியும்.

ஒரே ஒரு ஆசனம் ஏனைய சமூகத்தின் விதாசாரத்திற்கு ஏற்றவாறு செல்லும். ஒரு தமிழ் பிரதிநிதியைப் பெறுவதற்கான நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை எந்தக் கைக்கூலிகளும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

எனவே கடந்த பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளுடன் மேலதிகமாக ஏழாயிரம் வாக்குகளை தமிழ் மக்கள் அளிக்கும் பட்சத்தில் நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெற்ற பெருமையை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களைச் சென்றடையும். அவ்வெற்றி தமிழர்களுக்கான வெற்றியாக அமையும்.

மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாம் தெரிவு செய்யும் நான்கு தமிழ் பிரதிநிதிகளையும் தமிழ்த்தேசிய இருப்பை உறுதிப்படுத்தி, அதிகாரம் உள்ள பிரதிநிதிகளாக மாற்றுவதற்கு உருவாக்கப்படப்போகின்ற அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.

இத்தேர்தலின் பெறுபேறுகளே எதிர்கால தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளப் பெருமக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அம்பாறை ,திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்கள் பிரதிநிதிகளாக வருவதை இல்லாமல் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்ற உதிரிகள் இத்தேர்தலில் இருந்து தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்காமல் ஒதுங்கிக் கொள்வது எமது சமூகத்திற்கு நாம் செய்யும் நன்மையாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்