நீராவியடி வருடாந்தப் பொங்கலுக்கான ஏற்பாடுகளைத் தடுக்க போலீசாரை ஏவிய பௌத்த பிக்கு

 விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா 24.07.2020 நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், ஊர் மக்கள் இணைந்து, குறித்த பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளில் 23.07 இன்றைய நாள் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக நாளைய தினம் (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வுக்காக ஆலய நிர்வாகத்தினர், ஆலயச் சூழலில் தகரப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குறித்த இடத்திற்கு அதிகளவான ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப்படையினர், மற்றும் போலீசார் வருகைதந்திருந்தனர்.

அத்தோடு அங்கு வருகை தந்த போலீசார், ஆலயச் சூழலில் தகரப் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடைவிதித்திருந்தனர்.

குறித்த விடயத்தினை ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தொலைபேசிமூலம் அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியிருந்தனர்.

இந் நிலையில் நீராவியடி ஆலயத்திற்கு ரவிகரன் வருகைதந்து, ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து நாளையதினம் ஆலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த பொங்கல் விழா தொடர்பில் போலீசாருக்கு நிலைமைகளைத் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும் போலீசார் ஆலயச்சூழலில் தகரப் பந்தல் அமைக்கக் கூடாதெனத் தொடர்ந்தும் ஆலய நிர்வாகத்தினரைத் தடுத்தனர்.

இந் நிலையில் போலீசாரின் இடையூறுகளுக்கு மத்தியிலும் ஆலயநிர்வாகதினர் பந்தல் அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்தும் போலீசார் பந்தல் அமைப்பதற்கு தடை விதித்த நிலையில், ரவிகரன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் ஆகியோர், தகரப்பந்தலை ஆலயச் சூழலில் அமைக்கக்கூடாதென்றால், அவ் அறிவித்தலை எழுத்துமூலம் தருமாறு போலீசாரிடம் கோரியிருந்தனர்.

அதனையடுத்து போலீசார் கோவில் வளாகத்தில் பந்தலை அமைக்குமாறு கூறி அங்கிருந்து விலகிச் சென்றிருந்தனர்.

குறித்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்குவின் தூண்டுதலிலேதான் போலீசார் தம்மை ஆலயச் சூழலில் பந்தல் அமைக்கக்கூடாதெனத் தடுத்ததாகவும், போலீசார் பக்கச்சார்பாக நடந்துகொண்டதாகவும்ஆலய நிர்வாகத்தினர் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தனர்.

அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக தாம் நடந்துகொள்ளவில்லை எனவும், நாளை இடம்பெறவிருக்கின்ற பொங்கல் நிகழ்விற்காகத் தற்காலிகமாகவே தாம் தகரப்பந்தல் அமைத்ததாகவும் ஆலயநிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் ஆலயச்சூழலில் குடியிருக்கின்ற பௌத்த பிக்கு, நீதிமன்றத் தீர்ப்பினை மீறி ஆலயச் சூழலில் நீர்த்தாங்கி ஒன்றினை நிர்மானித்துள்ளதுடன், அங்கு பௌத்தக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளதாகவும், ஆகவே நீதிமன்றத் தீர்ப்பை மீறி பௌத்த பிக்கு செய்யும் செயற்பாடுகளுக்காக தாம் விரைவில் நீதிமன்றத்தினை நாடவுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்