காணி அபகரிப்பு நடவடிக்கையில் இராணுவம்

 விஜயரத்தினம் சரவணன்

கொரோனாச் சட்டத்தினால் மக்களை முடக்கி வைத்துக்கொண்டு, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா என்கின்ற சிங்கள பிரதேசசெயலாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய தமிழ் பிரதேசசெயலாளர் பிரிவுகளில் காணி அபகரிப்பு முனைப்பில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

இத்தகைய செயற்பாடு, தற்போதைய தேர்தல் காலத்தில் தமிழ் பிரதிநிகளைச் செயலற்றவர்கள் போன்று காட்டவும், குறிப்பிட்ட ஓர் கட்சியினை வெற்றியீட்ட வைப்பதற்குமான முயற்சி என முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினரின் இத்தகைய காணி கையகப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில், 10.06 இன்றைய தினம், முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகம், மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரிடம் மகஜர்களை வழங்கிவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில், மக்கள் ஆண்டு அனுபவித்த நிலங்களையும், ஏற்கனவே மக்களுக்காக, வனவளப் பிரிவினரிடம் கோரி விடுவித்துத் தருமாறு கேட்கப்பட்ட காணிகளையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் முனைப்புக்காட்டுவதாகத் தெரியவருகின்றது.

பிரதேசசெயலங்கள், மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகத்தான் இராணுவத்தினர் இத்தகைய செயற்பாட்டை முன்னெடுப்பதாக நான் நினைக்கின்றேன்.

இது ஒரு தேர்தல்காலம், தேர்தல் கலத்தில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பதவி அழந்த நிலையில், தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் ஒரு குறுக்குத் தனமாக, குள்ளத்தனமாக எமது நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதனை அனுமதிக்க முடியாது.

அதற்கு அரச திணைககளங்களும் துணைபோகின்றன. தற்போது திணைக்கள அதிகாரிகள் காணிகளை அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அதற்கமைய அலுவலக ஊழியர்கள் கிராமங்கள்தோறும் சென்று காணிகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முல்லைத்தீவுமாவட்டத்தில், வெலி ஓயா பிரதேசசெயலகம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இத்தகைய காணிளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் முனைப்புகாட்டிவருகின்றனர்.

தற்போது இராணுவத்தினர் எமது காணிகளை, உரிமை கொண்டாடுவதற்கு என்ன அடிப்படைத் தேவை இருக்கின்றது?

ஏற்கனவே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை எங்களால் விடுவிக்கப்பட முடியாமல் இருக்கின்றது.

எனவே இராணுவத்தினர் இவ்வாறு காணிகளை அபகரிப்பதற்கு அடிப்படை உரிமை எதுவும் இல்லை.

இராணுவத்தினர் இவ்வாறு மக்களது காணிகளை அடையாளம் காணக் கோருவதற்கும் இலங்கை அரசியல் யாப்பின் எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இதை அவரகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அது மாத்திரமல்லாது மக்களின் கணிகளை விடுவித்துத் தருமாறு, வனவளத் திணைக்களத்தினரை நாம் எத்னையோதடவைகள் கோரியிருக்கின்றோம்.

இன்று வரையில் மக்களுக்காக காணிகளை விடுவித்துத் தராத வனவளத் திணைக்களத்தினர், தற்போது இராணுவத்திற்காக அக்காணிகளை விட்டுக்கொடுக்கின்றனர்.

இந்த வனவளப் பிரிவினர் ஒரு தவறான நடவடிக்கையைச் செய்துவருகின்றது.
இவர்களுக்கெதிராக நாம், எமதுமக்கள் பாரிய அளவில் போராடவேண்டியவரகளாக இருக்கின்றோம்.

ஆனால் கோரோனாச் சட்டத்தினைப் பயன்படுத்தி, எம்மைக் ஒன்றுகூடவிடாது தடுத்துக்கொண்டு, இவர்கள் காணிகளை அபகரிப்பதற்காக ஒரு நரித்தனமான வேலையினை முன்னெடுத்துவருகின்றனர்.

எனவே முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்திடமும், மாவட்ட செயலரிடமும் இது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளேன்.

அதாவது தற்போது இராணுவம் எடுக்கும் நடவடிக்கை, ஒரு கட்சியினரை வெற்றியீட்டவைப்பதற்காகவும், தமிழ் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பிரதிநிதிகளை செயலற்றவர்கள் போல காட்டுவதற்கும் இந்த மக்களை கொரோனாச் சட்டத்தின் கீழ் அடக்கி வைத்துவிட்டு இவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

அதேபோல் அரசியல் பிரதிநிதிகள் அற்ற தேர்தல் கால நடவடிக்கையை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்விடயத்தில் நிச்சயமாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் இந்த நடவடிக்கைகளை உடனடியாக இடை நிறுத்துவார் என நான் நினைக்கின்றேன்.

தவறும் பட்சத்தில் தேர்தல் சட்டத்தினை மீறிய குற்றத்திற்காக முல்லைத்தீவு மாவட்டசெயலருககெதிராகவும், முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கெதிராகவும் நாம் நீதிமன்றம் சென்று முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துகாெள்கின்றேன்.

மேலும் தேர்தல் திணைக்களம் உதவித் தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல்கள் ஆணையாளர் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கின்றேன். என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்