தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

 “தேச பக்தி என்பது, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.   

இந்தத் தேர்தலில், சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும், தமது வெற்றிக்காக இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர், இனவாதச் சாக்கடைக்குள் முடியுமான அளவு உருண்டு, புரண்டு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.  

புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்கிற முரளிதரன், இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். அவர் தனது பிரசார மேடைகளிலெல்லாம், முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.   

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக, தமிழர் சமூகம் சார்பாகப் போராடிய கருணா அம்மான், தம்மை விடவும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசுவதென்பது, என்ன மாதிரியான ‘டிசைன்’ என்று புரியவில்லை.  

மறுபுறமாக, முஸ்லிம்களுக்கு எதிரான, கருணா அம்மானின் பிரசாரங்களைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, முஸ்லிம் மக்களை இனவாத ரீதியாகச் சூடேற்றும் முயற்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் சிலரும் இறங்கியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் ஆவார்.  

கருணா அம்மானும் ஹரீஸும் தத்தமது அரசிலுக்காக, ஒருவர் மீது ஒருவர் சொற் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினையாகக் காண்பிக்க முயற்சித்து வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும்.  

சூடேற்றும் ஹரீஸ்  

சில நாள்களுக்கு முன்னர், ஊடக சந்திப்பொன்றை நடத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், “எனது உயிருக்கு, கருணா அம்மான் குறி வைத்துள்ளார். அது தொடர்பாகப் புலனாய்வுப் பிரிவில் நான் முறைப்பாடு செய்துள்ளேன்” எனவும் கூறியிருந்தார்.  

அத்துடன், அவர் அந்த விவகாரத்தை முடித்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால், “முஸ்லிம் சமூகத்துடைய பெறுமானம் மிக்க, கல்முனைப் பிதேசத்தில் நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தில், முஸ்லிம் சமூகம் தோல்வியடையக் கூடாது; தலை பணிந்து விடக் கூடாது. கல்முனை நகரை, முஸ்லிம் சமூகம் இழந்து விடாமலிருக்க வேண்டுமென்றால், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும், இதை ஒரு சமூகப் போராட்டமாகக் கருதி, அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றும் அந்த ஊடகச் சந்திப்பில் ஹரீஸ் தெரிவித்தார்.  

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் சொந்த ஊர் கல்முனை. அங்கு, ஒரு பிரதேச செயலகம் இருக்கத் தக்கதாக, உப-பிரதேச செயலகமொன்றும் உள்ளது. உப-பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருமாறு, தமிழர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான எல்லைகளைப் பிரிப்பதில் இழுபறி உள்ளது.  

கல்முனை உப-பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரமானது, இப்போது தமிழர் - முஸ்லிம் பிரச்சினையாக மாறியுள்ளது. ‘பிச்சைக்காரனின் புண்போல்’ இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதுதான், தமது அரசியலுக்கு நல்லது என, இங்குள்ள அரசியல்வாதிகளில் சிலர் நினைக்கின்றனர்.  

இதேபோன்றுதான், கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது பிரதேச மக்கள், தமக்கெனத் தனியானதோர் உள்ளூராட்சி சபையை வழங்குமாறு, நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கல்முனையிலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், அதை விரும்பவில்லை.  

இதனால், சாய்ந்தமருதுக்கும் கல்முனைக்கும் இடையில் பகைமையொன்று ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஹரீஸ் பிரதித் தலைவராகப் பதவி வகிக்கும், முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக, சாய்ந்தமருதிலுள்ள பெரும்பான்மையான மக்களைத் திரட்டி, அங்குள்ள பெரிய பள்ளிவாசல் நிர்வாகம், தீர்மானங்களை நிறைவேற்றிய நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன.   

கடந்த அரசாங்கத்தில் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக ஹரீஸ் பதவி வகித்திருந்தார். ஒரு முறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய ஹரீஸ், “அட்டாளைச்சேனை பிரதேச சபையை, மூன்று மாதங்களுக்குள் நகர சபையாகத் தரமுயர்த்தித் தருவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும்.  

இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், அட்டாளைச்சேனை பிரதேச சபையை, நகர சபையாகத் தரமுயர்த்த மூன்று மாதங்களுக்குள் முடியும் எனத் தெரிவித்த ஹரீஸால், சாய்ந்தமருது மக்கள் நீண்டகாலமாகக் கோரிவருகின்ற உள்ளூராட்சி சபையை, ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை? அதேபோலவே, கல்முனை உப-பிரதேச செயலகத்தை, ஏன் தரமுயர்த்திக் கொடுக்க முடியாமல் போனது?  

கல்முனை உப-பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரும் விவகாரமானது, இப்போது தமிழர் - முஸ்லிம் மக்களுக்கு இடையிலான முரண்பாடாக மாறியிருக்கிறது. அதைத்தான் அங்குள்ள இனவாத அரசியல்வாதிகளும் விரும்புகின்றனர். தமிழர்களையும் முஸ்லிம்களையும் கல்முனையில் முட்டி மோதவைத்து, அதில் வாக்குப் பொறுக்கலாம் என்பது கேவலமான அரசியலாகும்.  

யுத்தத்துக்கு பதில் இனவாதம்  

நாட்டில் நிலவிய யுத்தத்தை வைத்து, தமது அரசியல் வியாபாரத்தை வெற்றிகரமாகச் செய்து வந்த அரசியல்வாதிகளுக்கு, யுத்தம் இல்லாமல் போனமை பெரும் இழப்பாகும். யுத்தத்தின் பின்னர், தமக்கான அரசியலைச் சூடேற்றுவதற்கு, இவ்வாறான அரசியல்வாதிகள் இனவாதத்தைத் கையில் எடுத்துள்ளனர். தமிழர், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்குள் அடங்குவர்.  

“கல்முனை நகரை முஸ்லிம் சமூகம் இழந்து விடாமலிருக்க வேண்டுமென்றால், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அனைவரும் போராட வரவேண்டும்” என, தேர்தல் காலத்தில் ஹரீஸ் விடுத்திருக்கும் அழைப்பை, இனவாத அரசியலின் ஒரு வடிவமாகவே பார்க்க முடிகிறது.  

இராஜாங்க அமைச்சராக ஹரீஸ் பதவி வகித்தபோது, இருந்த கல்முனைதான் இப்போதும் இருக்கிறது. அந்தக் கல்முனையில் ஓர் அங்குலத்தைக் கூட, யாரும் களவாடிச் செல்லவில்லை. ஆனாலும், கல்முனையைக் காப்பாற்றும் போராட்டமொன்றுக்கு ஹரீஸ் அழைப்பு விடுத்திருக்கிறார். இது ஏன் என்பதைப் புரிந்து கொள்தல், சீன வித்தையல்ல.  

மறுபுறத்தில், கல்முனையை முஸ்லிம்கள் அபகரிப்பதற்கு எதிராக, ஒன்று திரளுமாறு தமிழர்களுக்குக் கருணா அம்மான் அழைப்பு விடுத்து வருகின்றார். முஸ்லிம்கள், கல்முனையில் தமிழர்களின் நிலைத்தை அபகரித்து வருவதாகவும் அவர் பிரசாரம் செய்து வருகின்றார்.  

“முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற ஒரு கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்” என்று, அந்தக் கட்சிக்காரர்கள் கூறுவார்கள். கடந்த அரசாங்கத்தில், முஸ்லிம் காங்கிரஸ் பங்காளியாக இருந்தது. அது மட்டுமன்றி, கடந்த ஆட்சிக் காலம்தான் ‘முஸ்லிம் காங்கிரஸுக்கு வசந்த காலம்’ என, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அடிக்கடி கூறுவார்.   

ஆனால், கடந்த அரசாங்க காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அடித்தளமான அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகள் எவற்றுக்கும், அந்தக் கட்சி தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும்.  

பொத்துவில் அரசியல்  

உதாரணமாக, பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள முஹுது மகா விகாரையை மய்யப்படுத்தி, அந்தப் பகுதியிலுள்ள 72 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியொன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.   

இவ்வாறு கையகப்படுத்தினால், அங்குள்ள 300 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தொல்லியல் பொருள்கள் உள்ளதாகத் தெரிவித்தே, பொதுமக்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதனால், பாதிக்கப்படுவோர் அனைவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த அரசாங்கத்தில் கலாசார அமைச்சராக சஜித் பிரேமதாஸ பதவி வகித்திருந்தார். புத்தசாசன அமைச்சு அவரின் கீழேயே இருந்தது. அவரின் ஊடாக பொத்துவில் முஹுது மகா விகாரை தொடர்பில் நிலவி வரும் காணிப் பிரச்சினைக்கு அந்த அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் கட்சிகளால் ஏன் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று பலரும் கேட்கின்றனர்.  

ஆனாலும், பொத்துவில் முஹுது மகா விகாரையை மய்யப்படுத்திய காணிப் பிரச்சினையென்பது, ஏதோ புதிதாக,  நேற்று இன்று ஏற்பட்டது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அங்கு முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் சார்பான வேட்பாளர்கள் சென்று வருவதும், அது குறித்து அறிக்கைளை விடுகின்றமையும் ஏமாற்று அரசியலாகும்.  

அரசியல் ‘புண்’  

‘பஸ் போன பிறகு கை காட்டும்’ மடத்தனத்தை, ஏமாற்று அரசியலைச் செய்கின்றவர்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் சொகுசாக அமைச்சுப் பதவிகளை வகித்துக் கொண்டிருந்தவர்கள், அவர்களின் அமைச்சின் ஊடாகவும் அவர்கள் ஆதரவு வழங்கிய அரசாங்கத்தின் ஊடாகவும் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய எவ்வளவோ பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் அவற்றைச் செய்யவில்லை. அதற்கான காரணங்கள் பல உள்ளன. 

சம்பந்தப்பட்டவர்களின் பொடுபோக்குத்தனம், இயலாமை, நாம் முன்பு குறிப்பிட்டது போன்று பிச்சைக்காரனின் புண்களைப் போல், தமது அரசியலை வெற்றிகரமாகச் செய்யும் பொருட்டு, பிரச்சினைகளைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்கிற அயோக்கியத்தமனமான மனநிலை போன்றவைதான் அந்தக் காரணங்களாகும்.  

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் மிகப் பிரதானமானது காணிப் பிரச்சினையாகும். ஆலிம்சேனை, சம்மாந்துறை, கரங்கா வட்டை, பொத்துவில், வட்டமடு உள்ளிட்ட பிரதேசங்களில் முஸ்லிம்களின் பலநூற்றுக் கணக்கான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்ட காணிகளே இவற்றில் அதிகமானவை.  

கடந்த அரசாங்கத்தில், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மேற்படி காணிப் பிரச்சினைகள் எவற்றுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வட்டமடு காணிப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குமாறு அக்கரைப்பற்றிலுள்ள விவசாயிகள், மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் சத்தியாக்கிரகப் போரட்டம் நடத்தியபோது, அங்கு சென்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார். ஆனால், பல வருடங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.  

நினைக்கப்படாத நுரைச்சோலை வீடுகள்  

அதேபோன்றுதான், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அக்கரைப்பற்று, நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டமும் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.  

சவூதி அரசாங்கத்தின் நிதியில் 500 வீடுகளுடன், சிறு நகரம் போல் நிர்மாணிக்கப்பட்ட அந்த வீட்டுத் திட்டம், இப்போது காடு அடர்ந்த நிலையில் உள்ளது. அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்து விட்டன. 10 வருடங்களுக்கும் மேலாக, அந்த வீட்டுத் திட்டம் பாழடைந்து கிடக்கின்றது. நுரைச்சோலையிலுள்ள வீடுகளில் அதிகமானவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம்தான், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்காமல் இழுத்தடித்து வந்ததாக முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் குற்றம்சாட்டி வந்தன. ஆனால், அவர்கள் பங்காளிகளாக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்பது அவமானமாகும்.  

நுரைச்சோலை வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்காமல் மஹிந்த ராஜபக்‌ஷ தடுத்தார் என்று, கடந்த பொதுத் தேர்தல் கால பிரசார மேடைகளில் கூக்குரலிட்ட முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் இந்தப் பொதுத் தேர்தலில், நுரைச்சோலை வீட்டுத் திட்டம் குறித்து ‘பகிடி’க்கும் பேசவில்லை.  

இவ்வாறான அரசியலைச் செய்கின்றவர்களுக்கு ‘மருந்து’ கட்டுவதற்காகவே, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் கைகளில் ‘வாக்குச் சீட்டு’ என்கிற அற்புதத்தை ஜனநாயகம் வழங்கி வருகின்றது.  

ஆனால், மக்களோ ஒவ்வொரு தேர்தலிலும் தங்கப் பாத்திரத்தை ஏந்தி, பிச்சை எடுப்பவனின் நிலைக்கு மாறி விடுகின்றனர்.   

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்