வண்ணாத்திபூச்சி வெற்றிபெறாது

 ந.குகதர்சன் 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சியோ வெற்றி பெற முடியாது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தன்னை ஆதரித்து ஓட்டமாவடியிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

எமது கல்குடாப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இளவயதில் செய்கின்ற தைரியம் தான் எங்களை முன்னோக்கும். அந்த வகையில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கல்குடாவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக நீங்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

எங்கள் மண் காப்பாற்றப்பட வேண்டும். எங்களது மண்ணுக்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும். அந்த தலைமைத்துவம் உண்மையான, நேர்மையான, ஊழலற்ற, பண்பான நல்லதொரு தலைமைத்துவமாக இருக்க வேண்டும். அந்த தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக உள்ளேன். இதற்கு நீங்கள் தயாரா என்று கேட்டு என் பின்னால் ஒன்றிணைய வேண்டும்.

 அரசியலில் பல துடிப்புக்கள் மாறுவதற்கு இந்த இளைஞர் சக்தி என்பது ஒரு முக்கியமான சக்தியாக உள்ளது. அந்த சக்திதான் நீங்கள் கல்குடாவில் எடுக்கின்ற சக்தி. ஒருவரை வெல்ல வைக்கவும், தோற்க வைக்கவும் இளைஞர்களால் முடியும். நாம் அனைவரும் எமது மண் மீது நம்பிக்கை கொண்டு எமது மண்ணை பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் கடமையாகும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடியிலுள்ள முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லா போட்டியிடும்  கட்சியோ வெற்றி பெற முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வருகின்றது என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மாத்திரமே வர வேண்டும் என்றார்.

 ஓட்டமாவடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.அஸுஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்