“அடுப்புக்கள் ஒளியிழந்து அரை வயிறுகள் உயிர் வாழ்வு”

 சுஐப் எம். காசிம்

தேர்தலுக்கு திகதி குறித்தேயாக வேண்டிய சூழ்நிலையில், ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போவதாகக் குதிக்கும் கட்சிகளுக்கு வறிய மக்கள், குறிப்பாக மாளிகாவத்தை மக்கள் என்ன சொல்கிறார்கள்? “ஐயா! பெரியவர்களே! ஜனநாயகத்துக்கு முன்னர் எங்களது உயிர்களைக் காப்பாற்றுங்கள். இன்னும் விலை பேசப்படும் வாக்காளர்களாகவன்றி, வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் வாழ்வியல் தேவையுடையோராக, நோக்குங்கள், தேசியம், தேசிய தலைமைகளை சிந்திக்க முன்னர், நாளாந்த எமது தேவைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்.” வறிய மக்கள் எல்லோருக்கும் இது பொருந்தினாலும் மாளிகாவத்தை மக்களுக்கே அதிக பொருத்தம். ஏன் தெரியுமா? தலைநகரிலுள்ள மக்களின் தலைவிதியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எம் எல்லோருக்கும் காணக் கிடைத்ததே!

 “உண்ணீர், உண்ணீரென
உபசரியார் தம்மனையில் 
உண்ணாதிருப்பது கோடியுறும்.
மதியாதார் முற்றம்
மதித்தொரு காற்பதித்து
மிதியாதிருப்பது கோடியுறும்.”

 மாளிகாவத்தை மக்களும் இவ்வாறு அழைக்கப்பட்டு, அடங்காத ஆவலுடன் அள்ளுண்டு சென்ற போதுதான் அந்த அவலம் நிகழ்ந்தது. எப்பொழுதுமே பட்டினியாகக் கிடந்து ஒட்டிய வயிறுகள் பண்டிகைக் காலங்களிலாவது பெருக்கட்டுமே. இதுதான் அங்கு புறப்பட்ட  தாய்மார்களின் அடங்காத விருப்பம். இவர்களின் அடங்காத பசிகள் இப்படியொரு அடங்காத விருப்பத்தை ஏற்படுத்தி, ஜீவமரணப் போராட்டத்துக்குள் திணித்துவிட்டது. இதைக் கண்ணுற்ற போது, எனக்குள் ஒரு பாடல் ஒலித்தது. ஊரே ஒப்பாரி வைத்து நெஞ்சிலடித்த வேதனையில் பாட்டா? என்று நினைத்து விடாதீர்கள். பாட்டின் அர்த்தம் மாளிகாவத்தை தாய்மார்களின் வெற்றுமடிகள், அம்மக்களின் வற்றிய வயிறுகளுடன் இணைந்திருந்ததாலே பாடலை ஞாபகமூட்டுகிறேன். "இல்லையென்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லையென்பார். மடி நிறைய பொருளிருந்தும் மனம் நிறைய இருளிருக்கும். கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்".

 இம் மக்களின் மடிகள்  வற்றியவைதான். ஆனால், மனங்கள் இருளாலன்றி எதிர்பார்ப்புக்களால் நிறைந்தவையே. ஏமாற்றங்கள் இவர்களுக்கு அத்துப்படி. ‘ஏதாவது கிடைக்காதா? குழந்தைகளுக்காவது’ என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகக் கூடாதென்ற தாய்மை உணர்வுகளின் மேலெழுகைகளே, மாளிகாவத்தை தாய்மார்களை மரணத்துக்கு அழைத்துச் சென்றது. ஊனின்றி, உறக்கமின்றி, உடையின்றி, உற்சாகமின்றி, உறைவிடமின்றி எப்படியோ வாழ்நாள் கழிகிறது. பரவாயில்லை, தங்களையே எதிர்காலமென்றுள்ள பிள்ளைகளை, நல்ல நாளில் மகிழ்ச்சிப்படுத்த இவர்கள் எடுத்த எத்தனங்கள், எத்தனை பேரின் நெஞ்சங்களைத் திறந்தன? எத்தனை நாட்களுக்கு பிள்ளைகளை அதற்றி, அடித்து, இத்தாய்மார்கள்ஆறுதல் கூறியிருப்பர். பெருநாளிலும் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு ஒன்றுமில்லையென்பதா? இதைப் பிஞ்சுகள் பொறுக்காதே! இதுதான் இத் தாய்மார்களின் ஆதங்கங்கள்.

 இந்தத் தேர்தலிலாவது இதற்கு நாம் நிரந்தரத் தீர்வு காண்பதில்லையா? எத்தனையோ வெளியூர்வாசிகளை வாழவைக்கும் கொழும்பு, மாளிகாவத்தையை வாழ வைக்கவில்லையே! ஒரு சமூகத்தை தூக்கி நிறுத்தும் பிரதான தூண்களான மதம், அரசியல், பொருளாதாரம், கல்வியில் மாளிகாவத்தை நிலைமைகள் எவ்வாறுள்ளன? முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள இப்பகுதியில், போதியளவுள்ள பள்ளிவாசல்களின் பங்களிப்புக்கள் எப்படியுள்ளன? ஆத்மீகப் பணிகள், அறிவுரைகள் ஒழுக்கக் கட்டுப்பாடுள்ள சமூகத்தை ஏற்படுத்துகிறதா? மறுமை வாழ்வுக்கான அறப்போதனைகள், இவ்வுலக வாழ்வை விளை நிலமாக்கி, அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? இச் சந்தேகங்களே மது, சூது, கொள்ளை, கொலைகள், அறியாமைகள் இங்கு எப்படித் தலைவிரித்தாடுகின்றன என்று கேட்கின்றன.

 அரசியலில் சேர் ராசிக் பரீட், டொக்டர் எம்.சி.எம். கலீல், டொக்டர் டி.பி.ஜாயா, ஜாபிர் ஏ.காதர், ஹலீம் இஷாக், பழீல் ஏ. கபூர், மஹ்ரூப், பௌஷி போன்ற முக்கிய தலைவர்களை உருவாக்கிய தளமிது. இங்கு  மக்களுக்காகத் தலைவர்களன்றி, தலைவர்களுக்காகவே மக்கள். தேர்தல் காலத்தில் மட்டும் தேடப்படும் இவர்கள், அன்றைய வயிற்றுப் பசியை வைத்துப் பொறியில் பிடிக்கப்பட்டு வாக்கு வேட்டையாடப்படுகின்றனர். அன்று ஐம்பது ரூபாவுக்கு விலைபோன இவர்களது வாக்குகள், இன்று ஐந்நூறு ரூபாவாகியுள்ளன. அந்தளவில்தான் இவர்களின் வளர்ச்சி. இதிலென்ன சமூகப்பற்று? இவர்களுக்கு எதற்கு சமூக விடுதலை? இதில் தரகர்கள் சுருட்டிக்கொள்வது ஒரு தொகை. வாக்காளர்களுடன் நேரடி உறவுகள் இல்லாததால் இவ்விடயங்கள் தலைவர்களுக்குத் தெரிய வருவதுமில்லை.

 பாரிய நிலப்பரப்புக்கள் இருந்த தெஹிவளைப் பிரதேசத்தில் இவர்களைக் குடியேற்ற ஒரு காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்ததும் அரசியல் சக்திகள்தான். வயிற்றுப் பசியை வலை வீசிப் பிடிக்கும் இலகு அரசியலை வழியனுப்ப எவரும் விரும்பப்போவதில்லையே! இந்த இலகு இலட்சியக்காரர்கள் முஸ்லிம்களின் தேசியத் தலைமைக்கும் உரிமை கோரலாமா? சமூகமே இதனைத் தீர்மானிக்க வேண்டும். இத்தனைக்கும் மாறி மாறி வரும் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தோரின் கையாலாகாத லட்சணங்கள்தான், மாளிகாவத்தையை கையேந்துவோர் வாழும் வாழிடமாக்கியுள்ளது.

 தாருஸ்ஸலாம் பாடசாலைதான் இம்மக்களின் கல்வி அடையாளம். ஒரு காலத்தில் டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை (Denham English School) என்ற பெயரில் இயங்கிய இது காலை, மாலை இரு நேரப் பாடசாலையாக இருந்தது. வெளியூரிலிருந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள், அதிபர்கள் தமது வசதிக்காக மாலை நேரப் பாடசாலையைத் தேர்ந்தெடுத்து, காலை வேளையில் சட்டம், கணக்கியல் போன்ற வேறு கற்கைகளுக்கு மட்டுமல்ல தொழிலுக்குச் செல்வதுமுண்டு. பின்னர், “இவர்களின் மன நிலைகளை, மாலை வேளைப் பாடசாலையில் பார்க்கவா வேண்டும்?” என்கிறார், இங்கு அதிபராக இருந்த நண்பர் ரசூல்டீன். பன்மொழிப் பாண்டித்தியம் பெற்ற பிரபல பத்திரிகையாளரான இவர், இப்பகுதி கல்வி வளர்ச்சியில் எடுத்த அத்தனை பிரயத்தனங்களும் தோற்றதையே, மறக்க முடியாத வாழ்நாள் கவலையாக மனதில் வைத்துள்ளார்.

 எழும்பிய முகத்தோடு வீட்டில் தேநீர் குடித்துவிட்டு, பாடசாலைக்கு வந்துதான் முகம் கழுவும் இக்குழந்தைகளின் கல்வியைச் சொல்லாமல் விடுவதுதான் எனக்கு நாகரீகம். நான் வசிக்கும் பிரதேசத்தின் இல்லாமைகளை நானே சொல்வது, தாயின் ஆற்றாமையை அம்பலப்படுத்துவது போலாகுமே. சாதாரண தரம் வரையுள்ள மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் பாடசாலையில், ஏழாமாண்டு வகுப்புக்கு மேல் அநேகர் படிப்பதில்லை. தெருக்கடை வியாபாரம், தெரியாத பழக்க வழக்கம், தவறான தொடர்புகள், பாதாள உலகம் வரை இவர்களைப் பயிற்றுவிக்கிறது. கல்வி, செல்வம், கௌரவங்களிலுள்ள மவுசு, மரியாதை, சௌகரியங்கள் பற்றி எதுவுமே தெரியாத வாழ்க்கை இவர்களுடையது. நாளாந்தம் போராடி பொழுதுபடுவதற்கிடையில் விடைபெறும்  இவர்களின் பொருளாதாரம், இன்று அனைத்தும் மூடப்பட்டதால் “அடுப்புக்கள் ஒளியிழந்து, அரை வயிறுகள் உயிர் வாழ்கின்றன.”

 அப்பமே சாப்பிட வழியில்லாத மாளிகாவத்தைக்கு இன்று அனைத்துமே ஆப்பு. இங்குள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தில், அன்றைய நெரிசலில் சிக்குண்டோரின் செருப்புக்களை ஒளிபரப்பினால் புரியும். பொழுதுபோக்க விளையாடுவது, வாழ்க்கையோடு விளையாடுவது இரண்டும் எப்படியும் ஈடாகாது. மனப்பசிக்கும் வயிற்றுப் பசிக்கும் போராட்டம் நடக்கும் இவ்வுலகில், வயிற்றுப்பசியே ஜெயிக்காது நிலைக்கிறது. இதற்குள் மாளிகாவத்தை மக்களையும் வாழவைக்க வேண்டும். இதற்கான தலைமைகள் இந்தத் தேர்தலுக்குப் பின்னராவது தலையெடுத்து, வறுமை களையெடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களில் மூன்றிலிரண்டு பங்கினர் வாழ்வதற்காக, தேசியத் தலைமை தெற்கிலிருந்தே வர வேண்டுமென்ற விவாதங்கள், வெறும் கண்துடைப்பாக நின்று போனமைக்கு செயற்றிறன் வீழ்ச்சிகளே காரணம்.

 ஒரு சமூகத் தலைமையின் தகுதிக்கு செயற்படு தளங்களல்ல தகுதி, செயற்றிறன்களும் ராஜதந்திரங்களும் இனச் செறிவுமே காரணமென்பதை, கிழக்கில் ஒரு தலைமை நிரூபித்திருக்கிறது. இரண்டரை இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள்ள அம்பாரை மாவட்டத்தில், தனித்துவ தலைமை தோன்ற முடியுமென்றால், ஏன் சுமார் நான்கு இலட்சம் வாக்குகளுள்ள கொழும்பு மாவட்டத்தில் தேசியத் தலைமை தோன்ற முடியாது? எனவே,பெரிதாகவல்ல, வறுமைகளைப் போக்க சிறியளவில், சிறந்த திட்டம் வகுத்தால் போதும், மாளிகாவத்தை தாய்மார்களின் மடிகள் பருத்து, பிள்ளைகளின் வயிறுகள் புடைத்துவிடும்.

 எல்லோருக்கும் தையல் மெஷின்கள், எல்லோருக்கும் தள்ளு வண்டில்கள், சகலருக்கும் மாவரைக்கும் இயந்திரம், அனைவர் வீடுகளுக்கும் அடிப்படை உதவிகளை வழங்கினால், வியாபாரம், சந்தை வாய்ப்புக்களுக்கான கேள்விகள் இல்லாது போகிறது. இதில்தான் முறையான தேடல்கள், திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் இத் தேர்தலுக்குப் பின்னராவது!!!

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்