தானாகவே பொறியில் சிக்கிய கருணா அம்மான்

 


பல காலமாக, எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே நாளில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்குப் போய்விட்டார்.

அவர், மீண்டும் செய்தியின் மய்யப் பொருளாக மாறியதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் காலத்தைப் பற்றி அவர் வெளியிட்ட ஒரு கருத்துதான்.

ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 - 3,000 படையினரைக் கொன்றதாகத் தற்புகழ் தேடிக்கொள்ள முயன்ற விவகாரமே, அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள், சர்ச்சைகளுக்குக் காரணம்.
இங்கு கருணா வெளியிட்ட தகவல்களும் தவறு; அதனை நியாயப்படுத்தி அவர் கூறுகின்ற கருத்துகளும் தவறு. அதுபோல, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளிலும் தவறுகள் உள்ளன.

ஆனையிறவுச் சண்டையில், ஒருபோதும் ஒரே இரவில் 2000 - 3000 படையினர் கொல்லப்படவில்லை. 

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி, ஆனையிறவுத் தளம் வீழ்த்தப்பட்ட சமர்,  ஒரே நாளிலோ ஒரே இரவிலோ நடந்ததல்ல. அது, பல கட்டங்களைக் கொண்டது.

1999 டிசெம்பரில், பரந்தன் - உமையாள்புரம் தளங்களின் மீதான தாக்குதலில் தொடங்கி, பின்னர் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் 2000 மார்ச் 26ஆம் திகதியன்று, குடாரப்பு தரையிறக்கத்தில் தொடங்கி, இத்தாவிலில் ஊடுருவி, விநியோகத்தை மறித்துத் தொடங்கப்பட்ட சண்டைகள், வெற்றிலைக்கேணி, தாளையடி, இயக்கச்சி தளங்களை வீழ்த்தி நடத்தப்பட்ட சண்டைகளின் தொடர்ச்சியாகத் தான், ஆனையிறவுத் தளத்தின் வீழ்ச்சி நிகழ்ந்தது.

இயக்கச்சி குடிநீர்க் கிணறுகளின் வீழ்ச்சியே, அதில் முக்கிய பங்கு வகித்தது. 
அது, ஓரிரவில் நடக்கவுமில்லை. அந்தச் சமரில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படவும் இல்லை.

குடாரப்புவில் தாக்குதலைத் தொடங்கி, 34 நாள்களின் பின்னர் தான் ஆனையிறவுப் பெருந்தளத்தின் வீழ்ச்சி நிகழ்ந்தது.

இதன்போது, படையினர் தரப்பில் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் தான் உயிரிழந்தனர். அது கூட, ஓரிரவிலோ ஒரே நாளிலோ நடக்கவில்லை.

தளத்தில் இருந்த படையினரில் பெரும்பாலானோர் தப்பிச் சென்றுவிட்டனர் என்பதுதான் உண்மை.

இன்னொரு முக்கிய விடயம், ஆனையிறவுத் தளத்தின் மீதான தாக்குதலில், கருணாவின் பங்களிப்பு என்ன என்பதாகும்.

ஆனையிறவுத் தளத்தின் மீதான இறுதிக்கட்டத் தாக்குதலுக்கு, ஒருங்கிணைப்புத் தளபதியாக இருந்தவர் கேணல் பானு. 

வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு முகாம்களைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைகளில் மாத்திரமே, கருணா பங்கெடுத்திருந்தாரே தவிர, ஆனையிறவுத் தளத்தை வீழ்த்தும் நேரடி நடவடிக்கையில் அவர் பங்கேற்றிருக்கவில்லை.

அதுபோலவே, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான படையினரைக் கொன்றதாக அவர் கூறியிருக்கின்ற போதும், கிளிநொச்சியை வீழ்த்திய ஓயாத அலைகள் 2 சமர் நடந்தபோது, கருணா அந்தக் களத்திலேயே இருக்கவில்லை.

அவர், அப்போது  ஜயசிக்குறு  நடவடிக்கையை முறியடிப்பதற்கான ஒருங்கிணைப்புத் தளபதியாகவே இருந்தார். அதனால் அவர், கிளிநொச்சிக்கு செல்லவில்லை.

இந்தச் சமர்கள் நடந்து இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன என்பதால், பலரும் அதனை மறந்துவிட்டிருப்பார்கள் என்று கருணா கருதினாரோ தெரியவில்லை.

போர்க்களத்தில் கொண்டாடப்படும் ஒரு தளபதியாகவே கருணா இருந்தபோதும், தான் உரிமை கோரமுடியாத தாக்குதல்களில் தனது பங்களிப்பை அவர் மிகையாகக் காண்பிக்க முனைந்திருக்கிறார்.
போர்க்களச் சாதனைகளைப் பிரபலப்படுத்தி வாக்குகளைப் பெற முயன்றதால், கருணா இப்போது சர்ச்சைக்குள் சிக்கும் நிலை தோன்றியிருக்கிறது.

தெற்கில் அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்குப் பின்னரும், அவர் அதற்காக வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறினார். அடுத்தநாள் சிஐடியின் விசாரணை என்று வந்ததும், காய்ச்சல் என்று பதுங்கிக் கொண்டமை, அவரது பலவீனத்தையே வெளிப்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமன்றி, அவர் தவறான முன்னுதாரணங்களையே காண்பிக்க முனைந்திருக்கிறார்.
கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய சஜித் பிரேமதாஸவையும் அநுரகுமார திசாநாயக்கவையும் அவர் விமர்சித்திருக்கும் பாங்கு, இந்த விடயத்தை அவர் எந்தளவுக்கு புத்திசாதுரியமின்றி அணுக முற்படுகிறார் என்பதைக் காட்டுவதாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, புலிகளுக்குத் துப்பாக்கிகளையும் ரவைகளையும் தந்தார் என்றும் அந்த ஆயுதங்களாலேயே படையினர் கொல்லப்பட்டனர் என்றும் கூறியிருக்கும் கருணா, அதற்காக முதலில் சஜித் பிரேமதாஸவையே கைதுசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ரணசிங்க பிரேமதாஸ ஆயுதம் கொடுத்தார் என்பதற்காக, சஜித் பிரேமதாஸவை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது, எந்தளவுக்கு முட்டாள்தனம் என்பதுகூட அவருக்குப் புரியவில்லை.

அதேவேளை, 80 ஆயிரம் பேரைக் கொன்ற ஜேவிபி என்று விமர்சித்து, அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை விமர்சித்திருக்கிறார் கருணா. ஆனால், அநுரகுமார  திசாநாயக்க என்பவர், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அல்லர். அத்துடன், ஜேவிபி கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டவர்கள் எல்லோரும், ஜேவிபியால் கொல்லப்பட்டவர்களும் அல்லர்.

ஜேவிபியின் பெயரைப் பயன்படுத்தி, அரச படையினரால் கொல்லப்பட்டவர்களே அதிகம் என்பதும் கருணாவுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியம். தவறான வரலாற்றை முன்னுதாரணம் காட்ட முற்பட்டால், இதுபோன்று தான் சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேவேளை, கருணாவுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தெற்கில் இருந்தே கோஷங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரம் வடக்கில் இருந்து இதே கோரிக்கையை விடுத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வீ.மணிவண்ணன், ஆயிரக்கணக்கான படையினரைக் கொன்றதாக, கருணா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்றும் இதனை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்து மிகவும் சிக்கலானது.

ஏனென்றால், கருணா எந்தளவுக்குத் தவறிழைத்திருக்கிறாரோ, அதேயளவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தவறிழைக்க முற்பட்டுள்ளது. கருணாவின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, அவர் கைதுசெய்யப்பட வேண்டும் என்றால், முன்னாள் போராளிகள் பலரையும் அவ்வாறு கைதுசெய்யும் நிலைக்குத் தள்ளுவதாகவே அமைந்துவிடும்.

அதற்கும் அப்பால், புலிகள் இயக்கத்தில் இருந்தபோது நடந்த சம்பவங்களுக்காகவே கருணாவை கைதுசெய்யக் கோருவது தவறான முன்னுதாரணம். ஏனென்றால், புலிகளின் தளபதியாக இருந்தபோது எதற்காக கருணாவைக் கொண்டாடினார்களோ, அதற்காக இப்போது அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழர் தரப்பில் இருந்து எவரும் கோருவது மிகவும் கீழ்த்தரமானது.

புலிகளின் போர் வெற்றியைக் கொண்டாடி விட்டு, கருணா மீது கொலைப் பழியைப் போடுவது புலிகள் மீதும் அப்பழியை சுமத்துவதற்குச் சமமானது தான்.

நடந்தது போர். இரண்டு தரப்புகளும் ஒருவரை ஒருவர் கொன்றொழித்தது தான் உண்மை. அதற்குத் தவறாக உரிமைகோரப் போய், கருணா மாட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழர்த் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை, புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோருவதாகக் கருதக்கூடியது.
புலிகளுக்குப் பின்னர் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தரப்பு என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தளவுக்குக் கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கருணா மீதுள்ள கோபத்தைத் தீர்க்க, இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது சரியான அரசியல் வழிமுறையல்ல.

கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரும் அளவுக்கு பலவீனமான அரசியல் ஒன்றை முன்னெடுத்திருக்கிறது முன்னணி.

இவ்வாறான அரசியலின் மூலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதைச் சாதிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

கருணா தவறான தகவல்கள், தரவுகளுடன் செய்ய முனைந்த பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கப் போய், அவருக்கு அதிக பிரபலம் தேடிக் கொடுக்கும் நடவடிக்கைகள் தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறன.

தற்போதைய அரசியலில், எதிர்மறைப் பிரசாரங்களும் ஒருவிதப் பிரசார உத்தியாகப் பயன்படுகிறது என்பதைப் பலரும் மறந்து விட்டனர்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்