Tuesday, November 26, 2019

நான் சொல்ல விளைந்த கருத்துக்களை திசை திருப்பும் தனியார் தொலைக்காட்சியும் ஊடகவியலாளரும் அதாவுல்லா



சில ஊடகவியலாளர்களின் ஒரு தலைப்பட்சமான சிந்தனைகள் மாற்று அணிகளிலுள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்களை மழுங்கடித்து சமூகங்களுக்கான உண்மையான தீர்வுகளை மறைப்பதற்கு வழிகோலுகின்றது என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தான் சொல்ல விளைந்த கருத்துக்களை திசை திருப்பும் வகையில் ஊடகவிலாளர் நடந்து கொண்ட சம்பவம் பற்றி அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகச் சமூகத்தின் ஒப்பற்ற உழைப்பினாலே எமது நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கிறது.இவ்வுன்னத உழைப்பாளிகளின் வாழ்வாதார சவால்கள் உரிய தீர்வின்றி காலங்கடத்தப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா.

நாட்டின் மொத்த வருமானத்துக்கே வளம் சேர்க்கும் இம்மக்களின் உழைப்புக்கான ஊதியமாக ஐம்பது ரூபாவை அதிகரித்தல்,பறிக்கப்படும் கொழுந்துகளின் கிலோவை வைத்துக் கணக்குப்பார்த்தல் அல்லது வேலை செய்யும் நேரம் என்றில்லாமல் நிரந்தர வருமானத்துக்கு வழி காணப்படல் அவசியம். இவர்களுக்கென தனியான காணித்துண்டுகளை சொந்தமாக வழங்கி, விவசாயம், கிராமியப் பயிர்ச் செய்கைகளை ஊக்குவிக்க முடியும். தோட்ட முதலாளிமார்களின் தீர்மானம் இம்மக்களின் வருமானத்தை தீர்மானிப்பதை மாற்றியமைக்க இதுவே சிறந்த வழி.

ஆனால் நான்கரை வருடங்கள் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த மக்களுக்கு எதையும் செய்யாது காலம் கடத்திவிட்டது.சில அரசியல் தலைமைகள் தமது சொந்த இலாபங்களுக்காக சிறுபான்மை சமூகங்களை தவறாக வழிநடத்தும் காலம் மலையேறவேண்டும்.

இத்தவறான வழிகாட்டல்களால் எமது சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகம் மத்தியில் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையையே ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் தலைவர் என போற்றப்பட் அமரர் சௌமியமூர்தி தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமையையே பெற்றுக் கொடுத்தார். அதைபோன்றே சுயதொழில் செய்வதற்காக அம்மக்களுக்கு காணிகள் உரித்தாக்கப்பட வேண்டும் என்கிறேன்.

இதைவிடுத்து, மலையக மக்களின் தலைவரெனத் தங்களைத் தாங்களே முடிசூடும் சில தலைவர்கள் ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் பிரச்சினையை சில்லறைப் பிரச்சினையாக்குவதறக்கு இடமளிக்கக் கூடாது.

சில ஊடகவியலாளர்களின் ஒரு தலைப்பட்சமான சிந்தனைகள் மாற்று அணிகளிலுள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்களை மழுங்கடித்து சமூகங்களுக்கான உண்மையான தீர்வுகளை மறைப்பதற்கு வழிகோலுகின்றது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மலைய மக்கள் தொடர்பாக நான் சொல்லவிளைந்த கருத்துக்களை திசை திருப்பும் வகையில் அந்த நிறுவனத்தின் ஊடகவிலாளர் நடந்துகொண்டவிதம் வருத்தமளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

No comments:
Write comments