Tuesday, October 22, 2019

சஜித்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் தமிழ் பிரதேச ஆசிரியர்கள்!


முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவையில் உள்வாங்குவதாகவும் முன்பள்ளிகளின் சேவையினை முழுமையான இலவச சேவையாக வழங்குவதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவையில் உள்வாங்குவதாகவும் முன்பள்ளிகளின் சேவையினை முழுமையான இலவச சேவையாக வழங்குவதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற அறநெறிப்பாடசாலை திறப்பு விழா நிகழ்வு ஒன்றில் சஜித் பிரேமதாசவுக்கு மக்களின் சார்பாக இந்த கோரிக்கையானது என்னால் முன்வைக்கப்பட்டது. அந்த விடயத்தை சஜித் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
கொழும்பு மற்றும் சிங்கள நகரத்து முன்பள்ளிகள் அதிசொகுசு முன்பள்ளிகளாகவே உள்ளன ஆனால் எமது தமிழ் பிரதேசங்களில் அப்படியானவை இல்லை.
மிகவும் பின்தங்கிய நிலையிலேயே முன் பள்ளிகள் இயங்குகின்றது. மாகாண சபை வழங்கும் வெறும் நாலாயிரம் ரூபா கொடுப்பனவுடன் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவை செய்து வருகிறார்கள். அதன் காரணமாக அவர்களால் முழுமையான சேவையை வழங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே இவர்களை அரச சேவையில் உள்வாங்கி அவர்களுக்கான அடிப்படை வேதனமாக குறைந்தது இருபத்து நான்காயிரம் ரூபாவை வழங்குவார்களாக இருந்தால் அந்த ஆசிரியர்களால் முழுமையான சேவையினை வழங்க முடியும்.
முல்லைத்தீவில் சஜித் பிரேமதாசா குறிப்பிட்டது போல் சிறுவர்களின் மூளை வளர்ச்சி முன்பள்ளியிலேயே தொடங்கி விடும் எனவே இந்த விடயங்களில் மிகவும் கவனம் எடுக்க வேண்டி தேவை இருக்கின்றது என்பது முக்கியமானது. மேலும் சிங்கள கிராமப்புற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுனகளை பௌத்த விவகார அமைச்சின் ஊடாக பௌத்த பிக்குகள் வழங்கி வருகிறார்கள் என தெரியவருகிறது.
தமிழ் பிரதேசங்களில் அப்படி எங்கும் வழங்கப்படுவதில்லை எனவே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல சைவ அறநெறி ஆசிரியர்களும் இவ்விடயங்களில் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கும் நிரந்தர அரச வேலையை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது.
எனவே முன்பள்ளி ஆசிரியர்களுடன் அறநெறி ஆசிரியர்களுக்கும் நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:
Write comments