Sunday, October 20, 2019

மக்கள் காங்கிரஸ் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சி,. சஜீத்தின் வெற்றியும் உறுதி! - அமைச்சர் றிஷாட்



(ஷய்பான் அப்துல்லாஹ்)

T.B. ஜாயா முதல் மாமனிதர் அஷ்ரஃப் வரையுள்ள முஸ்லிம் தலைமைகள் யாரும் தமிழ்த் தலைமைகளைப் போல் முஸ்லிம்களுக்காக தனிநாடு  கோரவில்லை. அவர்கள் எம்சமூகத்தை நிம்மதியாக வாழ வைத்தார்கள் என மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (20) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முஸ்லிம்கள் இந்நாட்டில் மூவின மக்களுடனும் ஒன்றிணைந்து நிம்மதியாக நாட்டுப் பற்றுடன் வாழவே அன்றைய முஸ்லிம் தலைமைகள் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இன்று ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லிம்களின் நிம்மதி, பாதுகாப்பு என்பன கேள்விக் குறியாக மாறியுள்ள நிலையில், இதனை நாம் மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்திடம் பேச்சு நடாத்தி உறுதிப்படுத்திய பின்னரே மக்கள் காங்கிரஸ் அவரை ஆதரிக்க தீர்மானித்தது.

யாரும் நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க முடியாது. சகல இனங்களும் அவரவர் மத சுதந்திரத்துடன் வாழ வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்ற சஜீத்தின் பேச்சுக்கள் எமக்கான உத்தரவாதமாகும்.

மக்கள் காங்கிரஸ் தனது குறுகிய கால வளர்ச்சியில் 2005 முதல் 2015 வரையான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சியாகும். இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் வெற்றி பெறுவார் என்பதில் நாம் திடமாகவுள்ளோம் எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

No comments:
Write comments