Thursday, August 8, 2019

காஷ்மீர் விவகாரம் : விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்!


காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துகொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, வழக்கை அவசரமாக விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன் வழக்கு பட்டியலிடப்படுவதற்காக வைக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் கருத்தை அறியாமல், சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஆகஸ்ட் 12 அல்லது 13ஆம் திகதி அன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனுவை விசாரணை செய்த நீதிபதி என்.வி.ரமணா, மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments