Sunday, July 21, 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முடிவுகள்


பைஷல் இஸ்மாயில் - 

மிகப்பெரிய நெருக்கடி காலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு மாறியிருக்கும்  இந்த நாட்களில் பல முக்கிய தீர்மானங்களுக்கு வரவேண்டிய சூழ்நிலை இருக்கும் இக்காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னுடைய உயர்பீட கூட்டத்தை இன்று கூட்டியது. 

இன்று (21) காலை 10.30 க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இவ்வுயர்பீட கூட்டம் மாலை 03.30 வரை மிக காரசாரமான பல விவாதங்களுடனும் வாத பிரதிவாதங்களுடனும் நடைபெற்று முடிந்தது.

அங்கு பிரதானமாக கல்முனை உப பிரதேச செயலக விவகாரம், மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் பிரதானமாக ஆராயப்பட்டது. 

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் கடுமையாக சூடுபிடித்ததால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீபினால் பேசப்பட்டதைத் தொடர்ந்து, சகல உயர்பீட உறுப்பினர்களும் இந்த விடயத்தைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

கல்முனை விடயத்தில்  யாருக்கும், எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது. இது தொடர்பில் அரசுக்கு நிபந்தனைகளை விதித்து உடனடி தீர்வை பெறவேண்டும் என ஒட்டுமொத்த உயர்பீட உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து குரல்கொடுத்தனர். 

பிரதமர் ரணிலின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீள பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்கள் கடுமையாக அமைந்து காணப்பட்டது.

முஸ்லிங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை ஏற்கக்கூடாது. முக்கியமாக கல்முனை பிரச்சினை அடங்கலாக இப்போது மிக முக்கிய பிரச்சினைகளாக மக்களுக்கு மாறியிருக்கும் பிரச்சினைகளை முடிக்காமல் யாரும் அமைச்சுப் பதவிகளை ஏற்கக்கூடாது என அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்  வலியுறுத்தி பேசினார்.

மேலும் குறித்த விடயத்தினை அரசுக்கு நிபந்தனையாக முன்வைத்து கல்முனை பிரச்சினை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

சகல பிரதேசங்களிலும் தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இந்த அரசு எமது தலைமைக்கும் முஸ்லிம் எம்.பிக்களுக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு மறுகணமே தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சில முன்னாயத்தங்களை செய்துள்ளது.

இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயலாகும். இது முஸ்லிங்களின் முகத்தில் கரிபூசியதைப் போன்றது அமைந்து விட்டது எனவும் ஹரீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்கள் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்திப் பேசினர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதற்கு பதிலளிக்கையில்,

எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் எதிர்கொண்டுள்ள இச்சுழ்நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர் தனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை மீறிவிட்டார். 

இவ்விடயத்தை எந்தக் காரணம் கொண்டும் இழுத்தடிப்பு செய்யமுடியாது. இந்த விடயங்களுக்கு ஓரிரு நாளில் அரசு நிரந்தர தீர்வைத் தரவேண்டும். அரசு எந்த தீர்வையும் தராமல் யாரும் அமைச்சர் பதவிகளை பெறப்பெற்கப் போவதில்லை என காட்டமாக பதிலளித்தார். 

கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெறவேண்டும் அதை அவர் செய்யாமல் விட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசங்களுக்கு சென்று அமரப்போகும் செய்தியை நாளை தினம் முஸ்லிம் எம்.பிக்களுடன் சென்று பிரதமரிடம் எடுத்துக்கூறவுள்ளோம் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

No comments:
Write comments