Thursday, July 4, 2019

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை தற்போதைய அரசாங்கம் அதிகரித்தது.


வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை தற்போதைய அரசாங்கம் அதிகரித்துள்ளதாக
பொது நிர்வாக, உள்துறை. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளம்அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொறியியலாளர்கள், மற்றும் அமைச்சின் செயலாளர்களின் சம்பளம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், 

ஏற்கனவே 2015ம் ஆண்டு அரசாங்க ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. அதன் மூலம் ஆகக்குறைந்த சம்பளம் பெற்ற அரச ஊழியர்களுக்கு 11,730ரூபாவிலிருந்து 24,750ரூபா வரை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. 

இம்மாதம் முதல் மேலும் 2500ரூபா சம்பள அதிகரிப்பும் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான கொடுப்பனவுகளும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் இவ்வாறு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்கவில்லை. கடந்த அரசாங்கம் தமது தேர்தல் வாக்குறுதியாக 2500ரூபாவை அரசாங்க ஊழியர்களுக்கு பெற்றுத் தருவதாக கூறியிருந்தும் அதனை அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தியே பெற வேண்டியிருந்தது. எனினும் எமது அரசாங்கம் அரசாங்க ஊழியர்களின் சேவையைக் கருத்திற் கொண்டு சகல துறை ஊழியர்களுக்கும் சம்பளத்தை அதிகரித்துள்ளது. இதற்கிணங்க பொறியியலாளர்களின் சம்பளம் 47ஆயிரம் ரூபாவாகவும், அமைச்சுக்களின் செயலாளர்களின் சம்பளம் 82ஆயிரம் ரூபா வரையும் அதிகரிக்கப் பட்டுள்ளது. இதற்கென அரசாங்கம் 10பில்லியனுக்கு மேற்பட்ட தொகையை கொடுத்துள்ளது. 

அத்துடன் அக்ரஹார காப்புறுதி, ரயில்வே பருவச் சீட்டு உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவுகளும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேவேளை தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம் thinakaran  )     

No comments:
Write comments