Friday, June 21, 2019

“BATTICALOA CAMPUS ”சர்ச்சை- சவூதி அரேபியாவிலிருந்து எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை



“BATTICALOA CAMPUS” என்று அழைக்கப்படுவதும் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய உயர் கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்குக்கு ,சவூதி அரேபியாவிலிருந்து எந்தவித நிதியுதவியும் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை நிதிப் பிரிவின் முகாமையாளர் ஜனக் பிரசங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (20) வாக்குமூலம் வழங்கிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“BATTICALOA CAMPUS” உயர் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குக்கு, சவூதி அரேபியாவிலிருந்து நிதியுதவி வந்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, “பெட்டிக்கலோ கெம்பஸ்” உயர் கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, ஆணைக்குழு இலங்கை வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், குறித்த உயர் கல்வி நிறுவன வளாகத்தின் நிர்மாணம் தொடர்பில், வங்கியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் குறித்து  தகவல் தருமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவ்வாறு எந்தவித நிதியுதவியும் சவூதி அரேபியாவிலிருந்து “BATTICALOA CAMPUS” உயர் கல்வி நிறுவனத்திற்கு  கிடைக்கப் பெற்றில்லை என இலங்கை வங்கியின் கொள்ளுப்பிட்டி கிளை நிதிப் பிரிவின் முகாமையாளர் ஜனக் பிரசங்க  மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments