விஜயரத்தினம் சரவணன்
திருகோணமலை - தென்னமரவடி, கந்தசாமி மலையடிவாரத்தில், தமிழ்மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு வீதியை மறித்து தொல்லியல் திணைக்களம் தமக்குரிய கட்டடம் ஒன்றை அமைத்துள்ளது.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலைமைகளை, அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இவ்வாறுபார்வையிட்ட ரவிரன், தொல்லியல் திணைக்களம் தமிழர்களது நிலங்களை அபகரிக்க தம்முடன், மனநோயாளிகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னமரவடி என்ற இந்தக் கிராமமானது, எமது தமிழ் மக்களின் மிகப் பழைமை வாய்ந்த பூர்வீக கிராமமாகும்.

தனித் தமிழர்கள் இங்கு ஆண்டாண்டு காலமாக, பல நெடுங்கலமாக வாழ்ந்துவரும் இந்த மண், தற்போது பறிபோய்க்கொண்டிருக்கின்றது.

வடகிழக்கு தாயகப் பரப்பினை இணைக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள, கிழக்குமாகாண நிலப்பரப்பிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள கிரமாமே தென்னமரவடியாகும்.

இந்தக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, முல்லைத்தீவிற்கும், திருகோணமலை நகரை அண்டிய பகுகளுக்குமாக இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவில் இருந்த நிலையில், தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு மீள் குடியேற்றம் செய்த பிற்பாடு, தமது பூர்வீக வழிபாட்டு இடங்களுக்கோ, அல்லது வரலாற்று தொன்மையான இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையும், அவற்றை பாதுகாக்க முடியாத நிலையும் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலான இடப்பெயர்வினைச் சந்தித்த இந்த மக்கள், கடந்த 2011ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமது பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யும்போது, 100குடும்பங்கள் அளவில் இங்கு வந்தபோதும், அரசாங்கத்தினால் சரியான முறையில் இப்பகுதிக்கு வசதி வாய்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்காததால், தற்போது 35தொடக்கம் 40வரையான குடும்பங்கள்தான் இங்கே நிரந்தரமாக குடியிருக்கின்றனர்.

அந்தவகையில் தென்னமரவடியில், மிகவும் பிரசித்திவாய்ந்த பூர்வீக தமிழர்களின் வழிபாட்டிடமான கந்தசாமி மலையினை சென்று பார்வையிட்டேன்.

குறிப்பாக உடைந்துபோயுள்ள ஆலயத்தினுடைய சிதைவுகள், சிவலிங்கம் அமைந்திருந்த இடம், தமிழர்களுடைய பூர்வீக விளையட்டான, பாண்டி விளையாடிய இடங்கள் எல்லாவற்றையும் பார்வையிட முடிந்தது.

மேலும் தொல்லியல் திணைக்களம் தங்களுக்குரிய இடமென கந்தசாமி மலையை அபகரித்துள்ளதுடன், மலையடிவாரத்தில் தமிழ் மக்கள் பயன்படுத்திவந்த வீதி ஒன்றினை மறித்து, அவர்களுக்குரிய அலுவலகம் போன்ற ஒரு கட்டடத்தினை அமைத்துள்ளனர்.

எமது தமிழர்களின் பூர்வீக பழைமை வாய்ந்ததும், தொன்மை வாய்ந்ததுமான இடங்கள் தற்போது பறிபோய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்பகுதி தமிழ் மக்கள் அந்த இடங்களை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் இங்கே இருக்கின்றனர்.

இந்தாலும் இவ்வாறான தொல்லியல் திணைக்கள் போன்ற பல்வேறுபட்ட திணைக்களங்களின் அத்துமீறிய அபகரிப்பு நிலைமை தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது முல்லைத்தீவில் நயாற்றிலிருக்கும், பிக்குவிற்கு மனநோய் என நீதிமன்றில்அவர்களுடைய சட்டத்தரணியால் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இவ்வாறு மநோய் உள்ளவர்களை தொல்லியல் திணைக்களத்திற்குள் இணைத்துவைத்துக்கொண்டும், இதன்மூலம் மனநோய் பிடித்த வேலைகளை அவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

எங்குளுடைய மக்களுடைய பூரவீக நிலங்களை அபகரிப்பதை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உரியவர்கள் எடுக்கவேண்டும்.

எமது பூர்வீக, தொன்மையான இடங்கள் காப்பாற்றப்படவேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.