“ ஜனநாயக மக்கள் முன்னணி தன்மானம்மிக்க – தடம்மாறி பயணிக்காத – தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற தனித்துவமான கட்சியாகும். கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது சவால்களுக்கு மத்தியிலும் தனித்து களமிறங்கி இதனை நிரூபித்துக்காட்டினோம். எதிர்காலத்திலும் எமது வெற்றிநடை தொடரும்.”
– இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணி சின்னத்தில் களமிறங்கி வெற்றிவாகைசூடி தற்போது சபை உறுப்பினர்களாக அங்கம் வகிப்பவர்களுடன், அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே வேலுகுமார் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உள்ளாட்சி சபைகள் கீழ்மட்ட அரசியல் இயந்திரமாக கருதப்பட்டாலும் மேல்மட்ட அரசியலான மத்திய அரசாங்கத்தையே ஆட்டம்காண வைக்குமளவுக்கு பலம் படைத்தது. மக்களுடன் நேரடி தொடர்பைபேணி, அவர்களின் நாடிதுடிப்பை அறிந்து சேவைசெய்வதற்கான சிறந்த களமாகவும் விளங்குகின்றது.
பிரதான கட்சிகளின் வாக்கு வங்கியையும், தலைவிதியையும் நிர்ணயிக்கின்ற – தீர்மானிக்கின்ற தேர்தலாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் பார்க்கப்படுகின்றது. அத்துடன், சமூகம்சார்ந்த பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் இங்குதான் அடித்தளமிடப்படுகின்றது. 
அந்தவகையில் நடைபெற்றுமுடிந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் எமது தலைவர் மனோ கணேசனின் ஆலோசனையின் பிரகாரம் அவரின் வழிநடத்தலுடன் கண்டிமாவட்டத்தில் ஏணி சின்னத்தில் தனித்து போட்டியிட்டோம். தமிழ் மக்களும் எமக்கான அங்கீகாரத்தை வழங்கினர்.
சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்று, சபைகளில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தினோம். இது கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். இதன்மூலம் உரிமைக்காக, அபிவிருத்திக்காக பேரம் பேசும் பலத்தையும் நாம் அதிகரித்துக்கொண்டோம்.

நீங்களும் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றிவருவது மகிழ்ச்சியளிக்கின்றது. கட்சிபேதம் – தொழிற்சங்கபேதம் பாராது தமிழ் மக்களுக்கான சேவையை சிறப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது தலைவரின் அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி இன்று கோலோச்சி நிற்கின்றது. உரிமை அரசியலை உரமாக ஊட்டி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி இது.
இங்கு பருவகால அரசியலுக்கு இடமில்லை. கொள்கை மாறாது, தூரநோக்குடன் செயற்படுபவர்களுக்கே நீடித்து நிலைக்ககூடியதாக இருக்கும். இதன்காரணமாகவே மக்களும் எமக்கான அமோக ஆதரவை எவ்வித நிபந்தனையும் இன்றி வழங்கிவருகின்றார்கள்.” என்றார்.