இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், பௌத்த பிக்குமாரின் பௌத்த இனவாத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இலங்கை அரசாங்கம் அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சர்வதேச அமைப்புகளும் உள்ளூரில் உள்ள அரசார்பற்ற நிறுவனங்களும் குற்றம் சுமத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் கண்டி போகம்பர மைதானத்தில், அத்தே ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாடு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெதிரான கூட்டமாகக் கூறப்பட்டாலும் இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. 
 
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக பௌத்த அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாக ஞானசார தேரர் கூறுகின்றார். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கைத் தீவில் இருந்து முற்றாக இல்லாதொழித்து அனைத்து மக்களையும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற அடிப்படையின் கீழ் கொண்டு வருவதே இந்த மாநாட்டின் நோக்கமெனவும் ஞானசார தேரர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைப் போன்று, சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மற்றுமொரு தாக்குதலை நடத்த இடமளிக்கக் கூடாதெனவும், அதற்கான முதற் கட்ட ஏற்பாடாகவே கண்டி மாநாடு நடைபெறுவதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
சுமார் பத்தாயிரம் பௌத்த பிக்குமார்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் பௌத்த பிக்குமார்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வரென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
இதேவேளை முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவையின்றிக் கண்டி நகருக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அகில இலங்கை ஜமய்த்துல்லா உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கண்டி நகரத்தின் ஊடாக வேறு மாவட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு ஜமய்த்துல்லா உலமா சபை ஆலோசனை வழங்கியுள்ளது.
அதேவேளை, கண்டி மாநாட்டை நிறுத்துமாறு பொது அமைப்புகள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடமும் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதியிடமும் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், கண்டியில் நடைபெறவுள்ள பௌத்த பிக்குகளின் மாநாட்டிற்கு உாிய பாதுகாப்பு வழங்குமாறு இலங்கைப் காவல் துறை மா அதிபருக்கு இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. (கூ-மை)