விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூரவீக குளமான சிவந்தா முறிப்புக் குளத்தின் மறுசீரமைப்புப் பணிகள் ரூபாய் 5மில்லியன் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு கமநல சேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ராஜரத்தினம் சுகந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களை அப்பகுதியிலிருந்து இராணுவம் வலுக் கட்டாயமாக வெளியேற்றியிருந்தனர்.

இவவாறு வெளியேற்றப்பட்டவர்கள் கடந்த 2011ஆம் ஆண்டு அப்பகுதி மக்கள் தமது பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் அப்பகுதி மக்களின் நீண்ட கால இடப்பெயர்வு காரணமாக, அவர்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய குளங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என்பன வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில் சிவந்தா முறிப்புக் குளமும் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைய தற்போது இந்த குளத்தினுடைய மறுசீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முல்லைத்தீவு கமநல சேவைத் திணைக்களத்தின் தகவலின்படி, இந்தக் குளத்தின் கீழ் 30பயனாளிகளுக்குரிய, 50ஏக்கர் வயல் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தக் குளத்தின் மறுசீரமைப்பு வேலைகள் கமநல சேவைத் திணைக்களத்தின் 5மில்லியன் உரூபாய் நிதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த தமிழர்களது பூர்வீகமான சிவந்தா முறிப்புக் குளம் அமைந்துள்ள காணியினை, கடந்த ஆண்டு 30.07.2018அன்று தமக்கு உரித்தான காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் தமக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்து அபகரிப்பு முயற்சி ஒன்றில் சிங்கள மக்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் கமநல சேவைத் திணைக்களம் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் ஆகியோரின் தலையீட்டுடன் அந்த அபகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக் குளத்தினுடைய மறுசீரமைப்பால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்வுடன் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.