விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - மாங்குளம், பனிக்கன் குளம் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட, அரச உத்தியோகத்தர்களுக்கான வீட்டுத்திட்ட வீடுகளில் யாரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதனால் அவ் வீட்டுத்திட்டப் பகுதிகளினுள் சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதாக, அண்மையில் அப்பகுதி மக்களால் அதிர்ப்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் 11.07.2019 இன்றைய நாள் இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேசசபையின், ஜூலை மாதத்திற்கான அமர்வில் இவ் வீட்டுத்திட்டம் சம்பந்தமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இவ் விவாதத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசசபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் கருத்துத் தெரிவிக்கும்போது, பனிக்கன் குளம் வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்கள் கலந்துரையாடும்போது தவிசாளரும் உறுப்பினர்களும் வீட்டுத்திட்டம் என்றபெயரில் தமது பகுதியில் விபச்சார விடுதியா கட்டிக்கொடுத்திருக்கிறீர்கள் என மக்கள் தன்னிடம் கேட்டதாக தெரிவித்தார்.

அத்தோடு (ஏ-9) வீதியில் வீட்டுத திட்டம் ஒன்றினை பெற்றுவிடவேண்டும் என்ற ஆசையலேயே, அரச உத்தியோத்தர்கள் வீட்டுத்திட்டங்களைப் பெற்றதாகவும், அங்கு வீட்டுத்திட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும் வேறு இடப் பதிவுகளுடனும், வீட்டு வசதிகளுடன் வாழ்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் சபை அமர்வில் பாழடைந்து, பொதுச் சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள வீடுகளை அகற்றவேண்டும் என்பது தொடர்பான பிரேரணை ஒன்றினை தவிசாளர் முன்மொழிந்திருந்தார். இது தொடர்பான விவாதத்திலேயே பிரதேசசபை உறுப்பினர் முகுந்தகஜன் இவ்வாறு தெரிவித்திருந்தார்.