அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இலங்கைப் பொலிஸார், கண்ணீர்புகை பிரயோகமும், நீர்தாரை பிரயோகமும் செய்தனர். இதனால் பெருமளவு மாணவர்கள் சிதறியோடினர். சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டன. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏஎம். கிஸ்புல்லாவின் தனிப்பட்ட முயற்சியால் கட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாத ஷரியாச் சட்டத்திற்கு அமைவாகவும் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளவும் ரணில் தலைமையிலான அரசாங்கம் அனுமதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தி மாணவர்கள் கோசம் எழுப்பினர். 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது. நுகேகொட, கிருலப்பனை, ஹவலொக் வீதி தும்முல்ல சந்தியூடாக கொள்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்குச் செல்ல மாணவா்கள் முற்பட்டனர்.
இதனால் இலங்கைப் பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிவப்பு நிற கொடிகளை ஏந்தியவாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பல்கலைக்கழகத்தை மூடு என்றும் உரக்கச் சத்திமிட்டனர்.
கொள்ளுப்பிட்டி சந்தியை மாணவர்கள் சென்றடைந்த போது பொலிஸார் தடுத்தனர். ஆனாலும் பொலிஸார் காலி வீதிக்குக் குறுக்காக கம்பிகளினால் அமைத்திருந்த தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் உள்ளே சென்றனர். பொலிஸார் கண்ணீர்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் செய்து மாணவர்களைக் கலைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொள்ளுப்பிட்டியிலிருந்து, காலிமுகத்திடல் வரையான வீதி பிற்பகல் 1.30 இற்கு பின்னர் தற்காலிகமாக மூடப்பட்டது. விஜேராம வீதியில் இருந்து நுகேகொடைவரையிலான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை, ஷரியா பல்கலைக்கழகத்துக்கான அனுமதியை மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலத்தில் வழங்கியதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
ஷரியா பல்கலைக்கழகம் இலங்கைக்குத் தேவையில்லையென்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அமனுதி வழங்கப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க அனுமதியளிக்கவில்லையெனவும் மரிக்கார் கூறியுள்ளார்.
ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதியளிக்கவில்லையென இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏலவே கூறியுள்ளது. மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் கட்டப்பட்டமைக்கும் மானிய ஆணைக்குழுவுக்கும் தொடர்புகள் இல்லையென்றும் கூறப்பட்டிருந்தது.
இதேவேளை, இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சரவை உப குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். சவூதியரேபியா, ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து இந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்டுவதற்கு தொள்ளாயிரம் மில்லியன் ரூபாய்கள் வரை நிதி கிடைத்துள்ளதாக ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துந் நெத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகத்தை செயற்படுத்தவும் இந்த நாடுகளிடம் இருந்து பெருமளவு நிதி கடைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (கூர்மை)