விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் அதிபர் இன்மை நிலவுவதோடு, கட்டடங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவுவதாக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் கிட்ணபிள்ளை - சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதனால் பாடசாலை மாணவர்கள் சரியான முறையில் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு முங்ககொடுப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குறிப்பாக இந்தப் பாடசாலைக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக அதிபர் இன்மை நிலவுகின்றது.

அதேவேளை பாடசாலையில் விஞ்ஞானம் மற்றும், ஆங்கிலப் பாடங்களுக்கான ஆசிரியர்களும் இல்லை. எனவே இந்த பாடங்களை கற்பதில் மாணவர்கள் மிகுந்த இடர்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த பாடசாலையில் நான்கு வகுப்புக்களுக்கு கட்டட வசதி இல்லாமையால், மாணவர்கள் மர நிழலில் இருந்து கற்கவேண்டிய துப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே உரிய அதிகாரிகள் இவ்விடயத்தினைக் கருத்தில் எடுத்து, குறித்த பாடசாலையில் நிலவும் பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.