ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் முன்னணி எனப்படும், ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படுமென இலங்கை நாடாளுமன்றச் செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை தடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா தெரிவித்தார். 
 
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுன கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமென கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக மகிந்த தரப்பு நாளை செவ்வாய்க்கிழமை ஒன்று கூடி ஆராயவுள்ளது.
இதேவேளை, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிப்பரென ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்குமென கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனாலும் நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்று கூடி ஆராயவுள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையாதென அமைச்சர் லக்ஸ்மன் கிரியயெல்ல கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும். முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் கட்சிகளும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். (கூர்மை)