இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளும் இனவாதக் கருத்துக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குகள் மாபெரும் மாநாடொன்றை எதிர்வரும் ஜுலை மாதம் ஏழாம் திகதி நடத்தவுள்ளனர். சர்சைக்குரிய ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பௌத்த பிக்குமார் கலந்துகொள்வார்களென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகள் பலவற்றைக் கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் எடுக்கப்படவுள்ளன. 

இது தொடர்பாக சிங்கள ஊடகங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் வருகின்றன. இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழித்து அனைத்து மக்களையும் ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதே, இந்த மாநாட்டின் பிரதான இலக்கு என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் ஆடை, ஹலால், மத்ரஷ்ரா, காதிக்கோர்ட் சட்டம், தௌஹீத் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிராக பிரகடனம் செய்து, அவற்றை இலங்கை ஒற்றையாட்சியின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கையளிப்பதென பொதுபல சேன கூறியுள்ளது.
இந்த மாநாடு முஸ்லிம் மக்களுக்கு எதிரான மாநாடென்றும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த மாநாடு நடைபெற்றால் அன்றைய தினம் கண்டியில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பௌத்த பிக்குகளின் இந்த மாநாட்டை தடுத்து நிறுத்த எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவேயில்லையென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. (கூர்மை)