இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒன்றித்துச் செயற்படுவது தொடர்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் கொழும்பில் ஆலோசித்துள்ளனர். சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மூத்த உறுப்பினர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை ஒன்றுகூடி ஆராயவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சந்திப்பில் பங்குகொள்ளவுள்ளனர். 
 
எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாகவும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதா இல்லையா என்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் பேசப்படவுள்ளது.
பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த சமய நிறுவனங்களின் முஸ்லிம்கள் தொடர்பான எதிர்ப்புணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் கூடி ஆராயவுள்ளனர்.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கூட்டாகச் செயற்படுவது குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படுமென முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.
புதிதாக உருவாக்கப்படவுள்ள முஸ்லிம்களின் அரசியல் கூட்டணியின் தலைமைப் பதவியை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
பௌசியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தால், அரசியல் ரீதியிலான முரண்பாடுகளை தவிர்க்க முடியுமென மூத்த முஸ்லிம் உறுப்பினர்கள் கருதுவதாக ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகின்றது.
பௌத்த பிக்குமார், மகாநாயக்கத் தேரர்கள் ஆகியோரின் கடுமையான அழுத்தங்களினால் முஸ்லிம் உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து கூட்டாக பதவி விலகியிருந்தனர்.
ஆனாலும் பின்னர், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினா்கள் இரண்டு பேர் அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (கூர்மை)