இராணுவத்தினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் தொடர்பான வழக்கிலே திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இது இலங்கையின் நீதித்துறையை கேள்விக்கு உட்படுத்துகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாணவர் படுகொலை தொடர்பிலான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2006 ஜனவரி 02ல் திருமலையில் இராணுவத்தினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் தொடர்பான வழக்கிலே திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. மயிலந்தனைப் படுகொலை, குமாரபுரம் படுகொலை என்பவற்றோடு திருகோணமலைப் படுகொலையும் இலங்கையின் நீதித்துறையை கேள்விக்கு உட்படுத்துகின்றது.

நீதித்துறை என்பது தனியே நீதிமன்றத்தை மட்டும் சுட்டுவதல்ல காவற்துறையினரும், வழக்குத் தொடுனர் தரப்பினரும் நீதி வழங்குவதில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். சாட்சிகளைத் தொகுத்தல், அவற்றை நெறிப்படுத்தல் என்பன இந்த இரு துறையினரதும் கடமையாகும். குற்றச் செயலொன்று நடைபெற்றுவிட்டது என்பது வெளிப்படை அதை நிரூபிப்பதற்கான சகல பொறுப்பும் குறிப்பிட்ட இவ்விரு துறையினரையும் சார்ந்ததேயாகும். வெளிப்படையாகத் தெரிகின்ற இந்தக் குற்றச் செயல் நிரூபிக்கப்படவில்லை என்றால் இந்த இரு துறையினரும் தான் பொறுப்பக் கூற வேண்டும். இவர்களுடைய ஒன்றித்த செயற்பாடுதான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு காரணமாயிருக்கும்.

அனைத்து மக்களும், ஏன் சர்வதேசமும் அகலக் கண்விரித்து பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த வழக்கு சரியான சாட்சியங்கள் இல்லாமையால் மேல்நீதிமன்றத்திற்கு பாhரப்படுத்த முடியாத நிலையிலே குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிவான் நீதிமன்றம் விடுதலை செய்திருக்கின்றது. வழக்குச் சரியான முறையிலே நடத்தப்படாவிட்டால் நீதிமன்றம் இதைவிட வேறொன்றையும் செய்ய முடியாது. இருப்பினும் இத்தீர்ப்பின் மூலம் எடுத்த எடுப்பிலேயே நீதித்துறைதான் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும்.

அந்தவகையிலே நம்நாட்டு நீதித்துறையை தலைகவிழச் செய்துள்ள காவற்துறையினரும், வழக்குத் தொடுப்புத் தரப்பினருமே இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியர்களாவர். குறித்த இந்த வழக்கு தொடர்பான சம்மந்தப்பட்ட இரு துறையினர் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

இவ்வாறான நிலையில் போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கையை அரசு அலட்சியம் செய்தால் சர்வதேசத்தின் மத்தியில் அரசு மதிப்பிழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கையையே இந்தத்த தீர்ப்பு வெளிப்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.