செய்தியாசிரியர் அ.நிக்ஷன்.

தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பிரதேசத்தில் பௌத்த பிக்குமார் புத்த தாதுகோபுரம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் செயற்படும் இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ஈழத்தமிழ் மக்களின் பாரம்பரியப் பண்பாட்டுப் பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. 1817 ஆம் ஆண்டு இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதாக சைவ சமய ஆய்வாளர் திருச்செல்வம் கூறுகின்றார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வைகாசி மாதம் அமைச்சர் மனோ கணேசனின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் திருச்செல்வம் அந்த வரலாற்று ஆதாரங்களை உறுதிப்படக் கூறியிருந்தார். 
 
இந்த நிலையில், அனுராதபுரக் காலத்துடன் வெந்நீரூற்றுப் பிரதேசத்திற்குத் தொடர்புள்ளதாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ள இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் புதிய வரலாறு ஒன்றைக் கூறுகின்றது.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புத்த தாதுகோபுரத்தைக் கட்டுவது தொடர்பாகச் சம்பந்தன் தலையிட்டு குழப்பம் விளைவித்தாரென்று முறைப்பாடு கிடைத்துள்ளது. எனவே அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் குறித்த பிரதேசத்தில் புத்த தாதுக் கோபுரத்தைக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரியின் மேலதிகச் செயலாளர் ரோஹன அபயரட்ன அனுப்பிய கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்
பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதை நிறுத்துமாறு கடந்த யூன் மாதம் ஏழாம் திகதி திருகோணமலைச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தனர். இந்த நிலையில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் புஸ்பகுமார, இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மண்டாவெல ஆகியோரின் அனுமதிக் கடிதத்துடன் நேற்று வியாழக்கிழமை பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை உடைத்து விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற தென்கைலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், மற்றும் பிரமுகர்கள், பிள்ளையார் ஆலய அத்திவாரத்தை இடித்துக் கொண்டிருந்தவர்களைத் தடுக்க முற்பட்டனர்.
ஆனால் குறித்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு கொழும்பு உயர்மட்டங்களில் இருந்து அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அங்கு நின்றவர்கள் கடிதத்தை காண்பித்தனர். இதனையடுத்து தென்கைலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், அமைச்சர் மனோ கணேசனுக்கு உடனடியாகத் தகவல் அனுப்பினார்.
எனினும் அமைச்சரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த யூன் மாதம் ஏழாம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, விகாரை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு மாவட்டச் செயலாளர் புஸ்பகுமாரவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர, அமைச்சர் மனோ கணேசனுக்குக் கடந்த யூன் மாதம் ஒன்பதாம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். யூன் ஏழாம் திகதி மாவட்டச் செயலகக் கூட்டத்தில் விகாரை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்ட பின்னரே தேரர் மனோ கணேசனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்
இருப்பினும் விகாரையைக் கட்டுவதற்கான அனுமதிக் கடிதத்தை இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் கடந்த ஆனி மாதம் பத்தாம் திகதி மாவட்ட செயலாளர் புஸ்குமாரவுக்கு வழங்கியுள்ளது.
மீண்டும் 12 ஆம் திகதி மற்றுமொரு கடிதத்தை தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கன்னியாப் பிரதேசத்தில் செய்ய வேண்டிய திருத்த வேலைகளுக்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாமென்ற தொனியில் திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர, அமைச்சர் மனோ கணேசனுக்குக் கடந்த ஆனி மாதம் ஒன்பதாம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
யூன் ஏழாம் திகதி மாவட்டச் செயலகக் கூட்டத்தில் விகாரை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்ட பின்னரே தேரர் மனோ கணேசனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்
இதேவேளை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் சைத்தியம் எனப்படும் புத்த தாதுக் கோபுரத்தை உடனடியாகக் கட்டி முடிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிகச் செயலாளர் ரோஹன அபயரட்ன இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் மண்டாவெலவுக்கு கடிதம் ஒன்றை கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.
இது ஒரு இன அழிப்பு என்று உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் விபுசனன் தெரிவித்துள்ளார். கலை கலாச்சம் பண்பாட்டு இருப்பிடங்கள் அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பதும் இன அழிப்புத்தான் என்று அவர் கூறியுள்ளார்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புத்த தாதுகோபுரத்தைக் கட்டுவது தொடர்பாகச் சம்பந்தன் தலையிட்டு குழப்பம் விளைவித்தாரென்று முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் எனவே அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்காமல் குறித்த பிரதேசத்தில் புத்ததாதுக் கோபுரத்தைக் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் ரோஹன அபயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புத்த தாது கோபுரத்தை உடனடியாகக் கட்டி முடிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கு கடந்த யூன் மாதம் நான்காம் திகதி கடிதம் ஒன்றை அவசரமாக அனுப்பியுள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை, கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் புத்ததாதுக் கோபுரத்தை கட்டுவதற்கு ஏற்பாடுகள் துணிவோடு இடம்பெற்றதாக பிள்ளையார் ஆலய நிர்வாகம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது.
வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயத்தை இடித்துப் புத்த தாதுக் கோபுரத்தை கட்டுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் தொடர்பாக திருகோணமலை வில்கம் விகாராதிபதி அம்பிட்டிய சீலவன்ச திஸ்ஸ ஸ்தீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியதன் அடிப்படையிலேயே புத்த தாதுக் கோபுரத்தை உடனடியாகக் கட்டுமாறு அனைத்துத் தரப்பினரும் இலங்கைத் தொல் பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தனர் என்றும் அதன் பிரகாரமே மாவட்டச் செயலாளர் புஸ்பகுமார கட்டட வேலைகளை ஆரம்பித்திருக்கிறாரெனவும் ஆலய நிர்வாகம் கூறுகின்றது.
கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் இருந்த பழமைவாய்ந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து புதிதாகக் கட்டுவதற்காக 2004 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
தற்போது அந்த அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட அத்திவாரமே தொல்பொருள் திணைக்களத்தினால் உடைக்கப்படுகின்றது. குறித்த பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கத்திற்குரியதென 2011 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வர்த்தமானியில் அறிவித்துள்ளது.
ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை ஆலய நிர்வாகத்துக்கு அறிவிக்கப்படவில்லை. இது ஒரு இன அழிப்பு என்று உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் விபுசனன் தெரிவித்துள்ளார். கலை கலாசாரம், பண்பாட்டு இருப்பிடங்கள் அடையாளங்களை திட்டமிட்டு அழிப்பதும் இன அழிப்புத்தான் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவும் இலங்கைப் படையினரின் பாதுகாப்போடும் கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த தாது கோபுரம் கட்டப்படுவதைத் தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தென்கைலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கேள்வி எழுப்பியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு திருகோணமலையின் அரச அதிபராக சிங்களவர் ஒருவர் முதன் முதலாக நியமிக்கப்பட்ட பின்னர், கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
டபிள்யு.டி. சில்வா என்ற அரச அதிபரே இடிப்பதற்கு எற்பாடு செய்திருந்தாரெனவும் ஆனாலும் மக்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டு தற்போது 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதத்திற்குப் பின்னரான சூழலில் சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தலைவிரித்தாடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.