செ.தி.பெருமாள்
மஸ்கெலியா புரவுன்சீக்தோட்ட – புரவுன்சீக் பிரிவில் கடந்த பல மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் தோட்டத் தொழிலாளர்களும், அதிகாரிகளும் திண்டாடிவருகின்றனர்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மக்கள்,
” ஊற்றிலிருந்து நீரை எடுத்து நீர்த்தாங்கியில் நிரப்புவதற்கு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக ஒரு இயந்திரமே பயன்படுத்தப்படுகின்றது. இதனால், உரிய வகையில் செயற்பாடு இடம்பெறுவதில்லை. நாளொன்றுக்கு 30 நிமிடங்களே நீர் வழங்கப்படுகின்றது.
எனினும், நீர் இறைக்கும் இயந்திரம் பழுதடைந்தால் அன்றைய தினம் தண்ணீர் வழங்கப்படாது. இதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றோம்.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால் மழைநீரும் கிடைப்பதில்லை. இதனால் நீரை பெற சாமிமலை ஓயாவிற்கு செல்ல வேண்டியுள்ளது. சுமார் 1 ½  கிலோமீட்டர் தூரம் சென்று நீரை பெற வேண்டியுள்ளது.” என சுட்டிக்காட்டினர்.
எனவே, பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.