செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலும் தென்னவன் மரவாடி முருகன் கோவில் ஆகிய தமிழர்களின் பூர்விக மதவழிபாட்டு இடங்கள், இன்று பௌத்த மத ஆக்கிரமிப்புகளால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன என்று தெ​​ரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவஜிலிங்கம், ஒன்றுபட்டு ஒரேகுரலில் நின்றால்தான், ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியுமென்றுக் கூறினார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணப் பிரதிநிதிகளான வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபா குகதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், நீராவிடியப் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று, அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததென்று சொல்லப்பட்ட 1948ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை, சிங்கள பௌத்த அரசாங்கங்களால், தொடர்ச்சியாகத் தமிழர்த் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கலை, கலாசார மதச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்றும் கூறினார்.
ஆண்டாண்டு காலமாக, தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள், தமிழர் வரலாறுகளை மாற்றி அமைக்கக் கூடியவகையில் செயற்பட்டு வருகின்ற நிலையில், பல திணைக்களங்கள், இவ்வாறான செயற்பாடுகளுக்கு துணைநிற்கின்றன என்றும், சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டினார்.
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக பாரம்பரிய பூமியில் இருந்த அடையாளங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்க, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரேகுரலில் நின்றால்தான் ஆகிரமிப்புகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் இதேபோல் கிழக்கு மாகாணத்தின் எல்லையில் இருக்கின்ற அரச பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்ற இவ்வாறான நிகழ்ச்சிநிரலில், தமிழ் மக்களை இனரீதியாகவும் மதரீதியாகவும் அடையாளங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க, நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.