பா.திருஞானம்
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்படும் பெருந்தோட்டக் கண்காணிப்புப் பிரிவினூடாக, தோட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு,விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அனைத்துப் பெருந்தோட்டங்களும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்படும் என, பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பசறை, டெமேரியா தோட்ட முதலாம் பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள மைதான அபிவிருத்திக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று முன்தினம் (05), இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பெருந்தோட்டக் கம்பனிகள் கீழ் இயங்கும் அனைத்துக் கம்பனிகளும், காடுகளாக்கப்பட்டுள்ளது என்றும் தொழிற்சாலைகள் கைவிடப்பட்டுள்ளன என்றும் கூறிய அவர், தோட்டப் பராமரிப்புகள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது என்றும் கூறினார்.
தோட்டக் கம்பனிகள் அனைத்தும், அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்று கூறிய அவர், தேயிலைத் துறையை பாதுகாக்க, தேயிலை ஆராய்ச்சி சபைத் திருத்தச் சட்டம், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இது, மலையக மக்களின் ஒரு வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.