பா.மோகனதாஸ்

நூறு வீதம் தமிழ் மக்கள் பூர்வீக பரம்பரையாக செறிந்து வாழுகின்ற கல்முனைப் பிரதேசத்தில் ஒரு சில கடைகளை முஸ்லிம்கள் தங்களுக்கு உரித்தாக்கிக்கொண்டு தங்களுக்கு மாத்திரம்தான் சொந்தம் என்ற போர்வையில் செயலகத்தை தரமுயர்த்தாமல் தடுப்பதென்பது ஜனநாயக கடமைகளையும் தனிமனித உரிமைகளையும் மறுக்கின்ற செயலாகவே உள்ளது என கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.

வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தலில் கூட்டமைப்பின் வகிபங்கு தொடர்பில்,
கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான க.சிவலிங்கம், சோ.குபேரன், தி.ராஜரெட்ணம், பொன் செல்வநாயகம் ஆகியோர்களால் கல்முனையில் நேற்றுமுன்தினம் (23) ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

முப்பதாண்டுகளாக உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் காலத்திற்கு காலம் சகோதர அரசியல் தலைமைகள் தடைகளை ஏற்படுத்தியதுடன் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கின்ற இன அழிப்பு சுத்திகரிப்பு நடவடிக்கையினையும் 1947 ஆம் ஆண்டு எம்.எஸ். காரியப்பர் முதல் இன்று வரை அரங்கேற்றி வருகின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி நகர தனியார் பஸ் தரிப்பிடத்தில் தமிழருக்கெதிராக ஏட்டிக்குப் போட்டியாக சத்தியாக்கிரகம் மேற்க்கொண்டிருந்ததென்பது தடையினுடைய வெளிப்படையான நிலைப்பாடாகவுள்ளது. இவ்வாறான தீய சிந்தனைகளையுடைய செயற்பாடுகள் எந்த நாட்டிலும் இடம்பெறாததொன்று, ஆனால் கல்முனையில் மாத்திரமே நிகழ்ந்தேறுகிறது.

எங்களுடைய தமிழ் மக்கள் பிரதேசங்களை ஆட்கொள்வது சரியென்றால்
பலஸ்தீனத்திலே ஈஸ்ரேலியர்கள் தங்களுடைய குடியேற்றங்களை அமைப்பது சரியென்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஈஸ்ரேலியர்களது குடியேற்றங்கள் பிழையென்றால் கல்முனையில் தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதும் தவறாகும்.

கல்முனை சிங்கள கொலனி எனும் இடத்தில் ஒரு தனியான குடியேற்ற
கிராம நிலதாரி பிரிவு உத்தியோகத்தரை நியமித்து இஸ்லாமபாத் எனும் சட்டபூர்வமற்ற பெயருடன் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் நிர்வாகம் செய்கின்ற சட்டவிரோத செயற்பாடுகள் களையப்பட வேண்டும். இவ்வாறுதான் தமிழர் பிரதேசம் அடிமையாக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்கு உட்பட்டுத்தப்படுகின்றது. 31 கிராம சேவை பிரிவுகளுடன் இயங்கிய கல்முனை உப பிரதேச செயலகத்தில் 59, 59ஏ ஆகிய இரு கிராம நிலதாரிப் பிரிவுகள் வர்த்தமானியில் அறிவிக்கப்படாது சட்டபூர்வமற்ற முறையில் தெற்கு செயலக நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. இச்செயற்பாடுகளை அப்பட்டமான சட்டமீறலாகவே பார்க்கின்றோம்.

மாகாண சபையில் 6 பேரைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசிக்கு 11 பேரைக்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதுட்பட தமிழ்த் தலைமைகள் இற்றைவரைக்கும் எவ்வளவோ விட்டுக்கொடுப்புகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு தீர்வு ,ஜனநாயக ரீதியான நிர்வாக சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த நான்கு வருடத்திற்கு மேலாக எங்களுடைய பிரச்சினைக்கு சரியான தீர்வைக் கொடுக்க கையாலாகதவர்களாகவே நல்லாட்சி அரசாங்கம் இருக்கிறது.

வடக்கு உப செயலகப் பிரிவானது இயற்கை நிலத்தொடர்புடைய பிரதேசமாகவே இருக்கின்றது. கல்முனை தமிழ்ப் பிரதேசத்துக்குரிய சொந்தக்காரர்களை, அடக்கி ஒடுக்கி, அழித்து தங்களுடைய ஆட்சியதிகாரங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பது எதிர்காலத்திலே விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை சகோதர இனத்தவர்கள் உணர வேண்டும்.

றவூப் ஹக்கீம், ஹரீஸ் கூறுவது போல இது விடயத்தில் நிலத்தொடர்பின்மைப் பிரச்சினையோ எல்லை மீள் நிர்ணய செயற்பாட்டுப் பிரச்சினையோ இல்லை. உத்தேச கல்முனை வடக்கு(தமிழ்) பிரதேச செயலகப் பிரிவின் எல்லைகள் நிலத்தொடர்புள்ளதாக வரையறுக்கப்பெற்றுள்ள நிலையில் எல்லைகளுடன் வர்த்தமானி அறிவித்தலைச் செய்து 28/07/1993அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதே தேவையாகவுள்ளது.

கல்முனை பிராந்தியத்திலே இன நல்லுறவு, சமூக இணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அதனுடைய குறியீடாக உபபிரதேச செயலகம் தரமுயர்த்தலுக்கு எந்த சக்திகளும் தடை விதிக்கக்கூடாது. அவ்வாறு ஆரோக்கியமான நிலையேற்பட்டால் மாத்திரமே இரு இன சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வுடன் கூடிய நல்லுறவு ஏற்படும் என்றார்.