(க.கிஷாந்தன்)
மலையக மக்களின் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருபவர்களுக்கே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்கும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை இம்முனைப்போட்டி நிலவும் என சுட்டிக்காட்டிய அவர், சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறங்கினால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கும் எனவும் கூறினார்.
லிந்துலை பகுதியில் 24.06.2019 அன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
" டிசம்பர் மாதத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.  அதில் மலையக மக்களின் வகிபாகமும் முக்கியத்துவம் பெறும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கு மலையக மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். அவரின் வெற்றிக்கு மலையக மக்களின் வாக்குகளே வழிசமைத்தன.
எனவே, இம்முறையும் தீர்மானிக்கும் சக்தியாக எம்மவர்களே விளங்குவார்கள் என நம்புகின்றோம். மலையக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு யார் முன்வருகின்றார்களோ, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஆதரவு குறித்த அறிவிப்பு விடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தலில் ஐமுனைப் போட்டி நிலவும் எனக் கூறப்பட்டாலும், வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இறுதியில் மும்முனைப்போட்டிய நிலவும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது. எனவே, அவர் குறித்து கதைக்கவேண்டிய அவசியமில்லை.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அமரர். ரணசிங்க பிரேமதாச மலையக மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கியுள்ளார். பிரஜாவுரிமை, வீட்டுத்திட்டம் என பல விடயங்களை குறிப்பிடலாம். இப்படியான ஒரு தலைவரே எமக்கு தேவை. அது பிரேமதாசவின் வாரிசான சஜித் பிரேமதாசவாக அமைந்தால்கூட எமக்கு மகிழ்ச்சிதான்.
அதேவேளை, பெப்ரவரி மாதத்துக்கு பிறகு எந்நேரத்திலும் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என்றார்.