புதிய குரல் மட்டு செய்தியாளர் நடேசன் குகதர்சன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான நாவலடி கேணிநகர் கிராமத்தில் அமைந்துள்ள  கேணிநகர் மதீனா வித்தியாலயம் பல குறைபாடுகள் காணப்படுகின்றது.


இப்பாடசாலையானது முதலாம் ஆண்டு தொடக்கம் ஒன்பதாம் ஆண்டு வரை காணப்படுகின்றது. இப்பாடசாலை இரண்டு கட்டடங்களை கொண்டு இயங்கி வருகின்றது.


ஆனால் எட்டாம் ஆண்டு ஒன்பதாம் ஆண்டு மாணவர்கள் தங்களுடைய கல்வியை கற்பதற்கு வகுப்பறைக் கட்டடம் இல்லாமையால் பெற்றோர்களின் நிதி பங்களிப்புடன் தற்காலியமாக அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற கொட்டில்களில் தங்களது கல்வியை கற்று வருகின்றனர்.


அத்தோடு தற்காலிக கொட்டில்களில் மழை காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி இதனுள் கல்வி கற்பதற்கு பாரிய இடையூறுகளை மாணவர்கள் எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.


வெயில் காலங்களில் தற்காலிய கொட்டில்களில் கற்பிக்க முடியாத நிலையில் மர நிழலில் மாணவர்களை கொண்டு கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை இடம்பெற்று வருகின்றது.


இங்கு கல்வி கற்கும் மாணவர்களுக்கு தளபாட பற்றாக்குறை காணப்படுகின்றது. ஒரு கதிரையில் இரண்டு மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை காணப்பட்டு வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


மேலும் இப்பாடசாலையில் கட்டட வசதி, தளபாட பற்றாக்குறை காணப்படுவதுடன், ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இதனால் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பெரிதும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.இவ்விடயம் தொடர்பாக கல்வித் திணைக்களம், அரசியல்வாதிகளிடம் இது தொடர்பில் பல தடவைகள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இடம்பெற்றவில்லை. இப்பாடசாலையை அண்டிய ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் பாரிய முன்னேற்றத்துடன் கட்டட வளங்கள் நிறைந்த பாடசாலை காணப்படுகின்றது.


அத்தோடு இப்பாடசாலை மைதானத்தினை அண்டிய காணிகளுக்கு சுற்றுவேலி இன்மையால் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் பாடசாலை வகுப்பறைகளுக்கு வருகை தருவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படைகின்றது. மேலும் சுற்றுவேலி இன்மையால் இரவு நேரங்களில் பாடசாலையில் சில பொருட்கள் களவாடப்படுகின்றது. எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு பொருட்களை இழக்க வேண்டிய சூழ்நிலையும் காணப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆனால் கேணிநகர் மதீனா வித்தியாலயம் எந்த வளங்களும் இல்லாமல் காணப்படுகின்றது. இம்மாணவர்கள் வறியவர்கள் என்பதனால் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவதில்லையாக என பெற்றோர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.


எனவே புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுனர் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பாடசாலை மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் நோக்கில் பாடசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்டி வகுப்பறைக் கட்டடம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தளபாடங்கள் நிவர்த்தி செய்து தருமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.


அத்தோடு இப்பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தினை நிவர்த்தி செய்து ஏனைய பாடசாலை மாணவர்கள் கல்வி முன்னேற்றம் காணுவது போன்று கேணிநகர் மதீனா வித்தியாலய மாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் காண கிழக்கு மாகாண ஆளுனர் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றனர்;.


கல்குடாப் பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் கவனம் செலுத்தி பாடசாலையை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்வதுடன், பாடசாலை சுற்றுமதிலினை அமைத்து தர முன்வருமாறு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.