கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் காத்தமுத்து கணேசன் மற்றும் சுமித்திரா ஜெகதீசன் ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக இருவரும் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளிலும்,கட்சி விரோத நடவடிக்கைகளிலும் மற்றும் கொள்கைகளுக்கு முரணான வகையிலும் செயற்பட்டு வந்துள்ளார்கள் என்பது அவர்கள் மீது மேற்கொண்ட விசாரணைகள் மூலமாக தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாமல் காத்தமுத்து கணேசன் கல்முனை மாநகரசபை பிரதிமுதல்வர் என்ற பதவியை வைத்துக்கொண்டு பல மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு சமூகத்தை காட்டிக்கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரிடமும் இனிமேல் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எவரும் கட்சி ரீதியான எவ்வித தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

விரைவில் இருவரையும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதனை கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் அறியத்தருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். (ஆ-ச)