இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள் மன்றம் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து உரையாடியுள்ளது. கொழும்பு புஞ்சிபொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 

வடக்கு - கிழக்கு உட்பட பன்னிரென்டு மறை மாவட்டங்களின் ஆயர்களும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பது தொடர்பாகவும் ஆயர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியுள்ளனர். கிறிஸ்தவ பாடசாலைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்க முடியுமென ஆயர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனவும் தெரிவித்துள்ளனர். 
 
எனவே பாதுகாப்பு நிலைமைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதால், எதிர்வரும் 18 - 19 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வெசாக் பண்டிகையின் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது நல்லதென்றும் ஆயர்கள் ஆலோசனைகளை முன்வைத்தனர்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழியின் பின்னர் 14 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, வரும் ஞாயிற்றுக்கிழமை வோலயங்களில் மீண்டும் பூஜைகளை ஆரம்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகிக்கப்படும் சில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் விசாரணை செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமென பேராயர் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்தார்.
மத அடிப்படைவாதம் இருக்கும் வரை ஏனைய மதத்தவர்களுக்கு அச்சுறுத்தல் தொடருமெனவும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தவிர்ந்த ஏனைய ஆயர்கள் மைத்திரிபால சிறிசேனவுடன் காரசாரமாக உரையாடியதாகவும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டியதாக பேராயர் இல்லத் தகவல்கள் கூறுகின்றன.
உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் குண்டுகள் வெடிக்கலாமென இந்தியா முன்கூட்டியே புலனாய்வுத் தகவலை அனுப்பியிருந்த போதும், அலட்சியம் செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்தும் ஆயர்கள் மைத்திரியோடு வாதிட்டதாகவும் பேராயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் மன்றத் தலைவர், பதுளை மறைமாவட்ட ஆயர் ஜே.வின்ஸ்டன் பெர்னாந்து, மன்றத்தின் செயலாளர் சிலாபம் மறை மாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், குருநாகல் மறைமாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டனி பெரேரா, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்ரமசிங்க, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாந்து, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அந்திராடி, மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ,கண்டி மறை மாவட்ட ஆயர் ஜோசப் வியானி பெர்னாந்து, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் கிளேட்டஸ் சந்திரிசிரி பெரேரா, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.