இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்கு இலஙகையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார். இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றால், இலங்கையில் இரத்த ஆறு ஓடுமென மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதியென்றும் வெற்றிபெற்றால் இஸ்லாமியத் தீவிரவாதிகளை முற்றாக ஒழிப்பேன் என்றும் கோட்டாபய ராஜபக்ச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். 
 
இது தொடர்பாக கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, கோட்டபாய ராஜபக்சவை சிறையில் அடைக்காமல் தடுத்துக் காப்பாற்றியது ஐக்கியதேசியக் கட்சிதான் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்ததாகக் கூறிப் பெருமைப்பாட்டார் றொபேட் ஓ பிளேக்- ஆனால் தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்குத் தீனிபோட்டு வளர்த்தவர் கோட்டாய என்கிறார் அனுரகுமார திஸாநாயக்க
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆட்கடத்தல், அச்சுறுத்தல், கொலை போன்ற பாரிய குற்றங்களைப் புரிந்துவிட்டு இன்று சுதந்திரமாக வெளியில் நடமாடித் திருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவுமே இதற்குப் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் ரிஷரட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் கையொப்பமிடவில்லை.
பிரேரணையின் உள்ளடக்கத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து அறிந்த பின்னரே பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க முடியுமென ஜே.பி.வி உறுப்பினர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் (Robeறொபேட் ஓ பிளேக்rt O. Blake) பாராட்டியிருந்தார்.
கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்தபோது தீவிரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்காகத் தொழிற்றிறன் உள்ள உயர்மட்டக்குழுவை அமைத்திருந்தார். அவ்வாறான தகுதியுடைய தொழிற்றிறனுள்ள உயர்மட்டக்குழு, தற்போதைய சூழலில் இலங்கைக்கு அவசியமாகிறதென ஓ பிளேக் கூறியிருந்தார்.
சீனாவை மைய்பபடுத்திய தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையும் இலங்கைக்கான அதன் அர்த்தமும் என்ற தொனிப்பொருளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அதேவேளை, ஈழவிடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறைக்கு முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துள்ளதாகவும் இதனால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்ற போர்வையில் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்கள் மீதும் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லையெனவும் ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய சிங்கள அரசியல் கட்சிகள் கருதுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அ. நிக்ஷன்