மே 18 நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ்த் தேச எழுச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்வதாக முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழினத்தின் மீது கட்டமைத்து நடத்திய இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதனால் ஈழத் தமிழர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென ஈழத் தமிழா்கள் கோருவதாக மே 18 பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிணையில் இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பெருமளவு மக்கள் இன்று சனிக்கிழமை முற்பகல் 10.30க்கு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கண்ணீர்மல்கக் கலந்துகொண்டனா்.
சுனாமி அனர்த்தப் பேரழிவில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது போன்று, வருட வருடம் இடம்பெற்று வரும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வையும் மாற்றியமைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கமும் இந்தியப் புலனாய்வுத் துறையும் படாதபாடுபட்டது. ஆனால் இம்முறை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடித் தமது தேசத்துக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி பிரகடணம் செய்துள்ளனர்.
சுனாமி அனர்த்த பேரழிவில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவது போன்று, வருட வருடம் இடம்பெற்று வரும் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வையும் மாற்றியமைக்க வேண்டுமென இலங்கை அரசாங்கமும் இந்தியப் புலனாய்வுத் துறையும் படாதபாடுபட்டது.
ஆனால் இம்முறை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடித் தமது தேசத்துக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி பிரகடணம் ஒன்றைச் செய்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்று கூடி வெறுமனே அழுது புலம்புவதைத் தவிர தேசவிடுதலைக்கான சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டுமென்றே இந்திய- இலங்கை அரசுகள் எதிர்ப்பாத்திருந்தன.
ஆனால் மக்களின் எழுச்சியையும் போர் இல்லாதொழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்று விட்ட நிலையிலும் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை உணர்ந்துமே மக்கள் இம்முறை தேச அங்கீகாரத்துக்கான கோரிக்கையை பிரகடணமாக வெளியிட்டார்கள் என்று கூர்மை ஆசிரிய பீடம் கருதுகின்றது.
தேசத்துக்கான அங்கீகாரம் என்பது 1951 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் தமிழர் தாயகமான திருகோணமலையில் தமிழரசுக் கட்சியினால் முன்வைக்கப்பட்டது.
ஆனால் தமிழர் தேசம் என்ற கோட்பாட்டைத் தற்போது தமிழரசுக் கட்சி கைவிட்டு, இந்திய- இலங்கை அரசுகளுக்கு ஏற்றமாதிரியான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.
தமிழர் தேசம், தன்னாட்சி, இறைமை அதரிகாரம் ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்றமாதிரியான அரசியலில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்களும் பிரகடணம் வாசிக்கப்பட்டபோது சமூகமளித்திருந்தனர்.
எனினும் மக்கள் தமது தேசத்துக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தமிழ் இனப்படுகொலைகளை வெளிப்படுத்த வேண்டுமென்ற மன உறுதியோடும் இருக்கின்றார்கள் என்பதையே முள்ளிவாய்க்கால் மே 18 பிரகடணம் வெளிப்படுத்தியுள்ளது.
மே 18 2019 பிரகடனம் வாசிக்கப்பட்டபோது, தமிழர் தேசம், தன்னாட்சி, இறைமை அதரிகாரம் ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு இலங்கை- இந்திய அரசுகளுக்கு ஏற்றமாதிரியான அரசியலில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்களும் சமூகமளித்திருந்தனர்.
இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்ல விரும்பாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினா்கள், இந்தப் பிரகடனம் வாசிக்கப்பட்டபோது அமைதியாக இருந்து செவிமடுத்ததாக நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
மே 18 2019 பிரகடனத்தின் முழுமையான விபரம் பின்வருமாறு-
பேரன்பிற்குரிய உறவுகளே வரலாற்றின் வழிகளில் தமிழ் இனப்படுகொலை உச்சம் தொட்ட நாட்களின் தசாப்தத்தின் நிறைவில் எம் உறவுகள் துடிதுடிக்க கொல்லப்பட்ட மண்ணில் கனத்த இதயத்துடன் அவர் நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.
தமிழர்களுக்கு எதிராக சிங்கள-பௌத்த சிறீலங்கா பேரினவாத அரசு வரலாற்றில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கட்டம் கட்டமாக அரங்கேற்றி வந்துள்ளது.
இவ் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் அதி உச்சத்தை அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட எமது இரத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம்.
கொல்லப்பட்ட எமது உறவுகளின் கனவுகளை நினைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தின் ஒரு தசாப்தத்தை நினைவுகூரும் ஒட்டுமொத்த தமிழினம் அவலங்களை மட்டும் நினைவு கூரவில்லை. சிங்கள–பௌத்த சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்கு முறைக்கெதிராக தமிழினம் வெகுண்டெழுந்த வரலாற்றையும் அவற்றின் வெவ்வேறு வடிவங்களையும், கூட்டு உரிமைக்கான தியாகத்தையும் நினைவு கூருவது எம் ஒவ்வொருவரதும் வரலாற்றுக்கடமை.
தமிழர் உரிமைக்கான போராட்டத்தை சிறிலங்கா அரசு பயங்கரவாத முத்திரை குத்தி அதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தி வந்துள்ளது.
சர்வதேச மயப்படுத்தப்பட்ட பயங்கரவாத பிரச்சாரத்தினூடு ஆயுதப்போராட்ட வடிவம் மௌனிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பின் பின் தமிழர் போராட்ட வடிவங்கள் வெவ்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.
பின் முள்ளிவாய்க்கால் தசாப்தத்தில் வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய கோரிக்கை வலுப்பெற்றது.
தமிழர்கள் ஓர் இன அடையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள்,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள், வன்புணரப்பட்டார்கள். பூர்வீக வாழ்விடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.
தமிழர்கள் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்பட்டு சிறிலங்கா சிங்கள-பௌத்த தேசம் அது சிங்கள-பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது என காலணித்துவத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் சிறிலங்கா அரசு நவ காலணித்துவத்தை கட்டமைத்தது.
இது தமிழினத்தின் ஒட்டுமொத்த இருப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
தமிழினத்தின் மீது நடந்தேறும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதானது.
பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதிவேண்டி தமிழர்கள் ஒரு தசாப்த காலமாக ஐ.நாவின், சர்வதேச சமூகத்தின் உதவியை நாடியுள்ளார்கள்.
நடந்தேறிய அநீதிகளையும், உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்கான சர்வதேச நீதி விசாரணை இன்னும் ஆரம்பித்தாகத் தெரியவில்லை.
சிறிலங்கா அரசு பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் சிங்கள-பௌத்த மயமாக்கத்தையும், இராணுவ மயமாக்கத்தையும் விஸ்தரித்து இராணுவ இருப்பை நியாயப்படுத்தி தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களின் பூர்வீக நிலங்கள் படைத்தரப்பாலும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தாலும், தொல்லியல், வனவளத் திணைக்களங்களாலும் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் மத்தியில் சிறிலங்கா அரசு பயத்தை தக்க வைத்துக் கொண்டு உளவியல் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றது.
ஆயுதம் மௌனிக்கப்பட்டு ஒரு தசாப்தமாகியும் கைதுகளும், எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. பேச்சுரிமைக்கான வெளி நசுக்கப்பட்டுள்ளது.
ஒரு தேசத்தின் கலை-கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதற்கு அடிப்படையான பூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதென்பது எல்லா தேசங்களினதும் விட்டுக்கொடுக்கவே முடியாத அடிப்படை உரிமையாகும்.
சமூக கட்டுமானத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் சிங்கள தேசத்தில் இருந்தும் தனித்துவமாக வேறுபடுத்திப்பார்க்கக் கூடிய தனி சிறப்பியல்பான அம்சங்களைக் கொண்டிருப்பதன் மூலம் இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒரு தேசமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
சிங்களவருக்கு இருப்பது போன்று அதைவிட தொன்மையானதும் செழிப்பானதுமான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதினாலும், சிங்கள மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மிகத்தொன்மையான மொழிப்பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதோடு காலத்திற்கேற்ற நவீன மாற்றங்களை தன்னகத்தே உள்ளீர்த்து தனித்துவமான மொழியைக் கொண்டிருப்பதாலும், இலங்கைத்தீவில் வடகிழக்கு பகுதியை தமிழ் தாயகமாகக் கொண்டு வரலாற்றுப்பூர்வ குடிகளாக வாழ்வதாலும், சிங்கள அரசானது திட்டமிட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு மூலம் இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பை அழிப்பதற்கான எத்தனங்களில் தொடர்ந்தும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஒரு தசாப்தம் நிறைவடைந்தும் நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
நினைவு கூருவது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை. நினைவு கூருவதற்கான உரிமை மறுக்கப்படுவது உண்மையை மறுப்பதும் மறைப்பதுமாகும்.
சிறிலங்கா அரசு மறுப்புவாதத்தை நிறுவனமயப்படுத்தி உண்மைகளை வரலாற்றில் மறுத்து வந்துள்ளது. சாட்சியங்களை பொய்யர்களாக்கி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின், கையளிக்கப்பட்டவர்களின் விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்தும் வெற்றி வீரர்களாக உலா வருகின்றனர்.
மக்கள் பலத்தை நம்பி நினைவுகூரலை போராட்ட வடிவமாக, சமூக இயக்கமாக மாற்ற வேண்டிய சூழலுக்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அடக்குமுறைக்குள் வாழும் சமூகத்திற்கு நினைவுகூரல் ஒரு போராட்ட வடிவமே. தமிழ்த் தேசிய நினைவுத்திறம் அடக்குமுறைக்கெதிரான ஊடகம் என்பதை நினைவிற் கொண்டு உறுதிபூணுவோம் தமிழர் உரிமையை வென்றெடுப்பதற்கான பயணிப்பில் இணைவோம்.
மே 18 இன்றைய நாளை இன அழிப்புக்கு எதிரான தமிழ் தேச எழிச்சி நாளாகவும் 2019ம் ஆண்டை இன அழிப்புக்கு எதிரானதும் அரசியல் நீதிக்கான சர்வதேச வலுச்சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம்.
(அ.நிக்சன்)