மூன்று தசாப்தங்களின் பின்னர், இந்த நாட்டில் கொண்டுவரப்பட்ட அமைதியும் சுதந்திரமும் மீண்டும் பறிக்கப்படுமாகவிருந்தால், அதற்காக கிழக்கின் முஸ்லிம்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்களென, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏஎல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
 அக்கரைப்பற்றில்   இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலையால், எமது வளங்களையும், சொத்துகளையும் நாம் பயன்படுத்த முடியாது போனதானத் தெரிவித்தார்.
அவ்வாறான சூழ்நிலைகளில், தற்போது இந்த நாட்டில் அமைதியும், சமாதானமும் கொண்டுவரப்பட்டு, எமது வளங்களையும், எமது நிலபுலங்களையும், கடல், களப்புகளையும் சுதந்திரமாக பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள், மக்களுக்கு திருப்திகரமானதாக அமையவில்லை என்பது அனைவரதும் கருத்தாகவும் உள்ளன எனத் தெரிவித்த அவர், எமது நாட்டு வளங்கள், அந்நியர்களின் கைகளில் செல்வதற்கான நிலைமைகளும் இந்த நாட்டிலே காணப்படுகின்றன என்றார்.