ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் ஸ்ரீலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் படுகொலை செய்யப்பட்ட போது வாய்த்திறக்காது மௌனமாக இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியமில்லை எனத் தெரிவித்ததன் ஊடாக அவரது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழர்கள் எவரும் படுகொலை செய்யப்படவில்லை என அரசாங்கத்திற்காக கடந்த காலங்களில் பிரச்சாரம் செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இந்த கருத்தை பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் மார்ச் 21 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 40 ஒன்று தீர்மானத்திற்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கமும், சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்கப்போவதில்லை என்று சூளுரைத்துவருகின்றனர்.
சிறிலங்காவின் அரசியல் சாசனத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு அனுமதியில்லை என்பதே அவர்களது வாதமாக இருந்துவருகின்றது. இந்த நிலையில் அந்த வாதத்திற்கு ஆதரவாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மார்ச் 31 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு சிறிலங்கா நாடாளுமன்றில் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அமைச்சர் ஹக்கீம் மீது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


இறுதிக்கட்ட போரின் போது பொஸ்பரஸ் குண்டுகளுக்கு தமிழ்க் குழந்தைகளும் பலியான போதும் வாய்த்திறக்காத அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாகவும் சிறிதரன் கடுமையாக சாடுகின்றார்.

நன்றி - ஐ.பி.சி