அரசியல் கைதிகள் 24 வருடங்களுக்கு மேலாக சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்று வருகின்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, அவர்களது விடுதலை தொடர்பாக என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்.

ஏனென்றால் நான் நினைக்கின்றேன் ஒரு சிறை கைதி அல்லது ஆயுள் கைதி குறைந்தது 25 வருடங்கள் மாத்திரமே சிறையில் வாழ முடியும் அதன் பின் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது ஒரு சட்டத்தின் நியதி.
ஆனால் அரசியல் கைதிகள் 24 வருடங்களுக்கு மேலாக சிறையிலிருக்கின்றனர். இந்த நிலைப்பாட்டிலே இலங்கையின் சட்டம் என்பது எந்த அளவிலே அவர்களுக்கு ஒத்து போகின்றது என்பதை பார்கின்ற போது இந்த சட்டத்திற்கு முரணான வகையிலேயே அவர்கள் உள்ளே இருக்கின்றனர் என்பது என்னுடைய கருத்து.
எனக்கு சரியாக தெரியவில்லை எத்தனை ஆண்டுகள் ஒரு ஆயுள் கைதி சிறியில் இருக்க வேண்டும் என்பது. இருப்பினும் என்னுடைய கணக்கின் படி அந்த அரசியல் கைதிகள் சட்டத்திற்கு மாறான நிலையில் தான் உள்ளே வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினூடாக அவர்கள் விசாரிக்கப்படுகின்ற அந்த நிலையிலும், அதேபோன்று விசாரணையில்லாமல் பலர் இருந்து கொண்டிருக்கின்றனர்.

அமைச்சர் தளதா, எத்தனை வருட காலங்கள் ஒரு ஆயுள் கைதி சிறையில் இருக்க முடியும், அதன் பின் அவர்கள் விடுதலை பெறும் வருடங்களை கூறினால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
பல அரசியல் கைதிகளைப் பார்கும் போது செல்கள் அவர்களுடைய தலையிலும் அவையங்களிலும் இருக்கின்றன, ஆனால் அதனால் ஏற்படுகின்ற வலிகளுக்கு பெனடொல் தான் கொடுக்கின்றனர்.
கண் பார்வையற்ற அல்லது கண்ணை பரிசோதனை செய்கின்ற நிலை இருக்கின்ற போது அதுவும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. அதை விட தன்னுடைய மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாத நிலையிலே பல வருடங்களாக
இந்த நாட்டில் பயங்கரவாத சட்டத்திற்கு கீழ் எந்தவொரு அடிப்படை வசதிகளுமில்லாமல் அரசியல் கைதிகளை வைத்திருக்கின்றனர்.
ஆகவே அமைச்சர் தளதா அது தொடர்பாகவும் அவர்களது வைத்திய செயற்பாடுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் கைதிகளின் உள ரீதியான பாதிப்பென்பது அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் எங்களுக்கும் இருக்கின்றது.
ஏனென்றால் அது ஒரு பாரிய பிரச்சினையாக தற்போது இருந்து வருகின்றது. இது ஐ.நா வரைக்கும் சென்றிருக்கின்றது என்பதை நான் இங்கு நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
ஆகவே இந்த விடயத்திலே அரசாங்கம் அவர்கள் தொடர்பான ஒரு விடுதலையை வெகு விரைவாக செய்ய வேண்டும், பொது மன்னிப்பு அடிப்படையிலே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக ஆவண செய்ய வேண்டும் என நான் தயவாக உங்களிடம் கேட்டுகொள்கின்றேன்.
அது மட்டுமல்ல தயவு செய்து அவர்கள் அரசியல் கைதிகள் இல்லை என்று யாரும் சொல்லி விட வேண்டாம். அந்தவகையிலே அவர்கள் உண்மையிலேயே தங்களுடைய தியாக உணர்விலே ஒரு விடுதலை நோக்கி செயற்பட்டவர்கள் அதனால் தான் நாங்களும் அவர்களை மதிக்கின்றோம். அரசியல் கைதி என்று அழைக்கின்றோம்.
எனவே அரசாங்கம் அதனை முற்று முழுதாக மறுக்க கூடாது என்பது எங்களுடைய கருத்து. இந்த விடயத்திலே அவர்களுடைய விடுதலை தொடர்பாக அரசாங்கம் சரியான முடிவாக இன்றைக்கு என்ன செய்ய போகின்றது என்பதை அமைச்சர் இறுதியாக அவர்களுடைய உரையிலே கூற வேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.