தமிழர் தாயகத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் தமிழர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் மீன்பிடி மற்றும் விவசாயம் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. அதனடிப்படையில் போரின் காரணமாக அனைத்தையும் இழந்து அடிப்படையிலிருந்து தமது வாழ்வாதாரத்தை ஆரம்பித்துள்ள முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்தும் வெளிமாவட்ட மீனவர்களின் மீன்பிடித் தொழிலால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழில்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பிரதேசங்களில் காலத்துக்கு காலம் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையும் அவர்களால் முன்னெடுக்கப்படும் நிபந்தனையை மீறிய தொழில்களாலும் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாகப் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் போன்ற பகுதிகளில் வாழும் 80 சதவீதமான குடும்பங்கள் கடற்றொழிலை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ளதுடன், இப்பிரதேசத்தில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் கரையோரப் பிரதேசங்களில் கிடைக்கின்ற தொழில்வாய்ப்பை வைத்தே தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதாக கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தி தமது தொழில் நடவடிக்கையைப் பாதுகாக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை கண்காணிக்கச் சென்றவர்கள் மீது கடந்த பெப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.