எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் அமையுமென, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜயவிக்ரம தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு தொடர்பாக, அம்பாறையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (23) நடைபெற்ற உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள், கட்சியின் அமைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியை ஒரு பலமிக்க கட்சியாகக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்வதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏப்ரல் 01ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாடு, அம்பாறை மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.