போர்ச்சூழல் நிலவிய தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டுவரும் நிலையில் மக்களது சொந்த நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் பாரிய நெருக்கடியுடன் கூடிய சவால் காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ள தொண்டு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட இன அழிப்பு போர் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை பகுதியில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் பாரிய சவால் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
போர்க்காலத்தின்போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள் இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்துச் செல்வதாகவும் தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.
அது மாத்திரமன்றி கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துக்களுக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள எச்சரிக்கை பதாதைகள் மற்றும் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தி அவற்றையும் அடையாளந் தெரியாதோர் எடுத்துச் செல்வதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் பணியாளர்கள் அதனை சீர்செய்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கூட தற்போதும் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்படுவதுடன் மீள குடியேற்றப்பட்ட மக்கள் வெடிபொருள் வெடிப்பிற்கு இலக்காகி உயிரிழந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.