Friday, November 23, 2018

நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு வாய்ப்பு - ஆநுர குமார சூளுரை

SHARE
நாட்டில் ஒரு அரசியல் சூழ்ச்சியே ஏற்பட்டுள்ளதென்றும், மீண்டும் ஒரு தடவை அதனை அங்கீகரித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியில் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் என்றும், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் இன்று (23) கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் பொருளாதாரத்தின் முக்கிய கேந்திர நிலையங்கள், சுற்றுலாத்துறை, அரச பொறிமுறை என்பன பாரியளவில் வீழ்ச்சிகண்டுள்ளது. இன்று எமது நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மைக்கு அரசியல் சூழ்ச்சியே காரணம் எனவம் அவர் குறிப்பிடடுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தெட்டத்தெளிவான அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றுள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னர் இன்னொரு அரசாங்கத்தை கொண்டுவருவதாயின் அதற்கான வழிமுறைகள் உண்டு.
கடந்த காலத்தில் கொடுங்கோல் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்த விடயங்களை நாம் கண்டோம். கடந்த 26ஆம் திகதி, ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு மரபுக்கும் அமைவாக ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
தனியொருவரின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் ஏற்படும் விடயங்கள் அரசியல் சூழ்ச்சியே ஆகும். இதனால் ஏற்பட்ட விளைவுகளை நாம் கண்டோம். இவ்வாறான நிலை இரத்தக்களரியை ஏற்படுத்தும். ஏற்கனவே இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இந்த அரசியல் சூழ்ச்சியை அங்கீகரித்தால் எங்கே சென்று முடியுமென தெரியாது. இந்தமுறை இந்த சூழ்ச்சி இந்தளவோடு முடிவுற்றது. எதிர்வரும் காலத்தில் இவ்வாறு அமையுமென குறிப்பிட முடியாது.
அத்தோடு, ஏலத்தில் பொருட்கள் விலைபோவதைப் போல உறுப்பினர்கள் விலைபோகின்றனர். இந்த சீர்கெட்ட அரசியலை முடிவிற்கு கொண்டுவர வேண்டும்.
சூழ்ச்சியின் மூலம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதியால் தமது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. மக்கள் ஆணையை ஜனாதிபதி தூக்கியெறிய முடியாது.
ஜே.ஆர்.ஜயவர்தன அன்று பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து, உறுப்பினர்களின் இராஜினாமா கடிதங்களை பலவந்தமாக பெற்றுக்கொண்டார். வடக்கில் ஜனநாயகம் இல்லாமல் போனமைக்கு இதுவும் காரணம். அதன் தொடர்ச்சியாக சிவில் யுத்தம் ஏற்பட்டு இலட்சக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
19ஆம் அரசியலமைப்பின் விழுமியங்களை ஜனாதிபதி மீறிவிட்டார். கற்பனையால் நாட்டை ஆள முடியாது. அவருக்கும் வரையறைகள் உள்ளன. அதனை மீறி செயற்பட முடியாது.
பாராளுமன்றம் மௌனிக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடினோம். உயர்நீதிமன்றம் இந்த சூழ்ச்சியின் முதலாவது கட்டத்தை தோற்கடித்துவிட்டது.
இந்த சூழ்ச்சி மக்களின் ஆணைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. அதனை தோற்கடிக்கும் பொறுப்பு எமக்குண்டு எனவும் இதன் போது அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்
SHARE

Author: verified_user

0 comments: