Sunday, September 30, 2018

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்கு இராணுவத்தினரின் ஈடுபாடு அவசியமில்லை

SHARE


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துதற்கு இராணுவத்தினரின் ஈடுபாடு முழுமையாக அவசியமில்லை.

அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்த இராணுவத்தினருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இராணுவ தளபதி அண்மையில் கோரியிருந்தார்.

இது குறித்து கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர் அஜித் பீ பெரரே, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இராணுவத் தளபதி கோரிய வகையில் மேலதிக அதிகாரத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இராணுவத்தினர் மேலதிக அதிகாரம் கோருவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், காவல்துறையினரினாலே இந்தச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ் காவல்துறையினர் இல்லாமை இதில் பிரதான குறைபாடு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான நகல் வரைபு அடுத்த மாதம் 25 ஆம் திகதி அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என்றும், ஜனாதிபதியும் பிரதமரும் அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 comments: