Sunday, September 30, 2018

தினகரன், ரஜினி, கமலை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

SHARE

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா பெரும் விமரிசையாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு தமிழக முழுக்க 31 மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது. 

இதன் இறுதிவிழா நிகழ்வு சென்னையில் இன்று (செப்.30) நடைபெற்றது. இதற்காக சென்னை முழுக்க பேனர்கள், விளம்பரங்கள் என ஆச்சர்யப்படுத்தினார்கள் தமிழக அமைச்சர்கள். நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதியம் 3:30 மணிக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. இதற்கான பிரம்மாண்ட மேடையில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

இவ்விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

அன்பும் அறமும் ஒன்றாக இருந்தால் அது பண்பின் பயனாக அமைவது இயற்கை. அது போல, நம் அண்ணன்மார்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரின் இணைவு தமிழகத்தில் நம் இயக்கத்தை ஏற்றத்தில் வைத்திருக்கிறது. காலத்தின் கல்வெட்டில் அழிக்க முடியாத பெயர் எம்ஜிஆர். 

ஜனவரி 12-ம் தேதி எம்.ஆர்.ராதாவால் எம்ஜி.ஆர் சுடப்பட்டார். கழுத்தில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த இடத்தில் கட்டுடன் இருந்த புகைப்படமும், போஸ்டரும் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. இதைப் பார்த்த ஆன்மிக அரசியல்வாதி ஒருவரோ, கருணாநிதியால் தான் எம்ஜிஆர் அடையாளம் காட்டப்பட்டார், அதனால் அவரது படத்தை புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவில் வைக்க வேண்டுமென்று அரைவேக்காட்டுத்தனமாக பிதற்றிக் கொண்டிருக்கிறார். புரட்சித்தலைவரால் மட்டுமே திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வரானார் என்பது வரலாறு. ஆனால், ஒரு சில உளறுவாய்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சுயமரியாதைக்காக இயக்கம் கண்டது தமிழ்நாடு. அருகம்புல் ஆலமரமாக ஆசைப்படவே கூடாது. அது முடியவும் முடியாது. இன்னொன்றின் நிழலில் மட்டுமே வளர முடியும். சொந்தமாக வெயிலை தாக்குப்பிடித்து, முட்டி மோதி வளர அதற்கு திராணி கிடையாது. அப்படிப்பட்ட சில அரசியல் புற்கள் ஆகாச கோட்டைக்கட்டி அரியணைக் கனவில் மிதக்கின்றன. கட்சியிலே அரை நூற்றாண்டு காலம் ரன் - அப்பாவாக இருந்துவிட்டார் ஒருவர். சொந்தக்கட்சியிலேயே வின்னர் போஸ்டிங் தராமல் இழுத்து அடித்தார்கள். 

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு கேப்டன் பொறுப்பு கொடுத்துள்ளார்கள். அதற்கு மட்டும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அதிமுகவுடன் மோதி மனப்பால் குடிக்கலாம் என்று நினைத்தால் அய்யோ பாவம். என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை. அவருக்கு சொந்தமாக முடிவு எடுக்கவும் தெரியாது. சொந்தக்காரர்களை சமாளிக்கவும் தெரியாது. அப்படிப்பட்ட ஒருவரா அதிமுகவை எதிர்கொள்ள முடியும். 

நாங்கள் புரட்சித்தலைவரின் வழி வந்தவர்கள். எதிரிகளுக்குத் தோல்வியை மட்டுமே பரிசாக வழங்கியவர்கள். பாவம், அவரும் காலம் காலமாக தோல்வியை மட்டுமே பரிசாக வாங்கியவர் தானே. எதிர்வரும் தேர்தலில் வரும் தோல்விகளுக்கு இப்போதே அழுது பழகிக் கொள்ளட்டும். அரசியல் அகராதியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்த பெருமை திமுகவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. 

நில அபகரிப்பு, பிரியாணிக் கடை சண்டை, பியூட்டி பார்லரில் சண்டை என தொண்டர்கள் எப்படியிருக்கிறார்கள் பாருங்கள். கடைக்கோடி தொண்டன் இப்படி என்றால், கட்சித்தலைவர் எப்படியிருப்பார் என்று நீங்கள் புரிந்துக் கொள்ளுங்கள். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி. அவர்களுக்கு எந்தப் பொறுப்பையும் தர தமிழக மக்கள் தயாராக இல்லை. 

திகாரில் இருக்க வேண்டிய சில கரன்கள் தினகரன்களாக ஊருக்குள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்டத்தில் எத்தனை பிரிவுகள் உண்டோ அத்தனையிலும் வாய்தா பெற்று வாழ்த்து கொண்டிருக்கிறார்கள் சில அற்ப பதர்கள். அம்மா பெயரை  உச்சரிக்கக் கூட தகுதியில்லாதவர்கள் அந்த ஜீவன்கள். அதிமுகவை விமர்சிக்க தங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று கொஞ்சமாவது எண்ணிப் பார்க்க வேண்டும். 
மாஃபியா கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததே மன்னார்குடி குடும்பம் தானே. இன்று வெள்ளையும்   சொள்ளையுமாகத்  திரிகிறார்களே... அவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த கோட்டும், சூட்டும். அம்மா முன்னால் நடித்து ஏமாற்றிய நயவஞ்சக நரிகள் கூட்டத்திலிருந்த ஓநாய் ஒன்று இப்போது அம்மாவின் ஆட்சியைப் பார்த்து ஊளையிட்டுச் செல்கிறது. வெளிமாநிலத்தவர்களுக்கு ரூபாய் கொடுத்து கூட்டத்தைக் கூட்டி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் என்று மார் தட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா?. பிழைக்க வந்தவர்களிடமே பிச்சைக் கேட்பது வெட்கமாக இல்லையா உனக்கு. 

20 ரூபாய் அயோக்கியன், டோக்கன் செல்வன் என்றாலே ஆர்.கே.நகர் தொகுதியில் அனைவருக்குமே தெரியும். யாராவது வடசென்னையில் 20 ரூபாய் நோட்டுடன் வந்தாலே துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். முதலில் அவர் தலைக்கு மேல் தொங்கும் அமலாக்கத்துறை வழக்கை கவனிக்க வேண்டும். அதிமுகவையும், தமிழகத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சினிமாவில் முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டு, தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஜெயிக்க முடியாமல் அரசியல் அரிதாரம் பூசி வந்திருக்கிறார்கள். 

நான் எப்ப வருவேன்,எப்படி வருவேன்னு தெரியாதாம், உன்னோட பாதையே உனக்குத் தெரியல. தமிழ்நாட்டுக்கு என்ன வேணும், எப்போது வேணும் என்பது மட்டும் எப்படி தெரிஞ்சுப்ப. அதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். இன்னொருத்தர் இருக்கிறார். அவர் என்ன பேசுகிறார் என்பதை டிக்‌ஷனரி வைச்சுத்தான் விளக்கம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருத்தர் மய்யமாக வந்து நிற்கிறார். தன் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல், கட்சி ஆரம்பித்த ஒரே நடிகர் அவர் தான். எப்படிப்பட்ட நோக்கம்? கட்சி ஆரம்பித்ததே ரிலீஸ் பிரச்சினைக்குத்தான். திரையில் உங்களுடைய ஆக்டிங் எடுபடலாம், அரசியலில் உங்களுடைய ஆக்டிங் எடுபடவே படாது. 

ஒரு நூற்றாண்டு காலம் இனி அம்மாவின் ஆட்சி தான். சமூகவளர்ச்சிக்காக எதிரிகளை களமாடிய போராளி பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா போல நம்முடைய அண்ணன்மார்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவர்களும் தமிழகத்தின் துயர் துடைக்க அம்மாவின் வழியில் நமக்கு இருக்கின்றார்கள். 

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
SHARE

Author: verified_user

0 comments:

arrow_upward