Tuesday, July 17, 2018

திமுக அமைச்சர்கள் பலருக்கு வீட்டு தெருவில் கூட ஓட்டு இல்லை - தினகரன் சாடல்

SHARE


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

வருமான வரித்துறை சோதனை முட்டை வடிவில் நாமக்கல், திருச்செங்கோடு என 70 இடங்களில் தொடங்கியது. இன்றைக்கு தெற்கே விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் நடக்கிறது.

இரட்டை இலை இன்றைக்கு துரோகிகள் கையில் போனதால்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து சுற்றுகளிலும் முன்னணியில் வந்தோம் என்றால் டோக்கன் கொடுத்தா வர முடியுமா?

கோயபல்சு குமாரால் (ஜெயக்குமார்) அவர் வீட்டு தெருவிலேயே ஓட்டு வாங்கி கொடுக்க முடியவில்லை. அந்த தெருவில் கூட நான் அதிகமான ஓட்டு வாங்கி உள்ளேன். அதற்கு என்ன சொல்வார். பழைய பேப்பர் கடைக்கு போடுவோம், டெபாசிட் போய் விடும், கூமுட்டை என்றார். யாரை கூமுட்டை என்று நான் சொன்னேன் தமிழகத்திலுள்ள எட்டு கோடி மக்களுக்கும் புரிகிறது. இது யாருக்குப் புரியவில்லையோ அவர்கள்தான் கூமுட்டை.

ஆட்சி இருப்பதால் அ.தி.மு.க. என்ற பேனர் அங்கு இருக்கிறது. அங்கு வெறும் செங்கல் கட்டிடம் மட்டும் தான் உள்ளது. உயிரும், ரத்தமும், சதையுமான தொண்டர்கள் எங்கள் கூட இருகின்றனர். ஆட்சி அதிகாரம் இருப்பதைக் கருதி கொஞ்ச பேர் அங்கு ஓட்டிக் கொண்டுள்ளார்கள். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகத்தான் வரும். உச்சநீதி மன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டிதான் இந்த வழக்கே போட்டுள்ளோம்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு சட்டமன்ற பொதுத்தேர்தலும் வரும் என்று உறுதியாக எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்போது 234 தொகுதிகளிலும் கூட்டணியோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும். அதுபோல மத்தியில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் முடிவு செய்வார்கள். நிச்சயம் இது நடக்கும்.

எடப்பாடி பழனிசாமியை அம்மா பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராகத்தான் ஆக்கியிருந்தார். முதலமைச்சராக்கவில்லை. பொதுச்செயலாளர் சசி கலாதான் பழனிசாமியை முதலமைச்சராக்கினார். தாய் ஸ்தானத்தில் வைக்க வேண்டியவரை எடப்பாடிபழனிசாமி கட்சியை விட்டே நீக்குகிறார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் இந்த ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும். அதனால் தான் எங்கள் கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தேன்.

எஸ்.பி.கே. நிறுவனத்தில் 2000 கோடி ரூபாய்க்கு மேல் சாலை அமைப்பதற்கு ஒப்பந்தத்தை எஸ்.பி.கே. நிறுவனத்திற்கு தான் கொடுத்துள்ளதாக வெற்றி வேல் ஏற்கனவே சொல்லியிருந்தார். அங்குதான் தற்போது சோதனை போய் கொண்டுள்ளதா?

பருப்பு கொள்முதல் செய்ததில் ஊழல் பற்றி கேட்டதற்கு அமைச்சர் காமராஜ் சமாளித்து பேசுகிறார். இன்னும் சில நாட்களில் எல்லாம் வெளிவரும். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்பார்கள். அதனால் கருவுள்ள முட்டை வடிவிலிருந்து வெளிவர தொடங்கியிருக்கிறது. தியாகம், தர்மம் யார் பக்கம் ஆதரவாக இருக்கிறதோ அவர்களுக்காக இயற்கையே நடத்துகின்ற நிகழ்வுகள்தான் தற்போது நடைபெறும் சோதனைகள்.

ஜெயக்குமார் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தவறானவர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். சோதனை வர ஆரம்பித்தவுடன் எச்சரிக்கை விடுப்பது போல என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்கள். இவர்கள் விடும் எச்சரிக்கைக்கு 3 வயது குழந்தை கூட பயப்படாது.

காங்கிரஸ் இதுவரை கூட்டணிக்கு எங்களை அணுகவில்லை. நடக்காத ஒன்றுக்காக அனுமானத்தில் பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். ஒரு வேளை அணுகினால் அப்போது அதுபற்றி சொல்கிறேன். நிச்சயம் நாங்கள் ஒரு சிறந்த கூட்டணியை அமைப்போம். அது மக்கள் விரும்பும் கூட்டணியாக இருந்து மாபெரும் வெற்றி பெறும்.

மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம் என அனைத்து மண்டலங்களிலும் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். நிச்சயம் 200 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதிலிருந்து ஒரு சீட்டு குறைந்தாலும் தேர்தலுக்கு பிறகு என்னிடம் கேளுங்கள்.

அ.தி.மு.க. இரண்டாக பிளவு படவில்லை. 90 சதவீதம், 10 சதவீதம் என்று தான் பிளவுபட்டு உள்ளது. 10 சதவீதத்திலும் ஆட்சியில், அவர்களுக்கு கூட இருக்கும் 2சதவீதம் தவிர மற்ற 8 சதவீதம் கூட எங்களுடன் வந்துவிடுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். 15 தொகுதிகளில் கூட்டணி கட்சி வெற்றி பெறும். 37 தொகுதிகளிலாவது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம். அம்மா பெற்ற வெற்றிபோல நாங்களும் 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மக்கள் விரும்புகிற கூட்டணியை நாங்கள் அமைப்பதை தேர்தல் வரும்போது பாருங்கள்.

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்
SHARE

Author: verified_user

0 comments: