Wednesday, July 4, 2018

கோத்தபாயவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

SHARE
Related image

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் அவன்கார்ட் நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு கூறி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள திருத்த மனுமீதான விசாரணைகள் முடிவடையும் வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த திருத்த மனுமீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் நீதியரசர்கள் அப்போது இந்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தனர்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் காலி துறைமுகத்தில் அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றை நடத்த அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி இலஞ்ச ஆணைக்குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளது.

வழக்கு தொடரப்பட்டுள்ள விதம் இலஞ்சம் தொடர்பான சட்டத்திற்கு முரணானது எனவும் வழக்கு தொடரப்பட்ட விதம் சட்டவிரோதமானது அடிப்படை எதிர்ப்பை முன்வைத்த போது நீதவான் நீதிமன்றம் அதனை நிராகரித்ததாக கோத்தபாய ராஜபக்ச தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவானின் தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் திருத்த மனுவொன்றை தாக்கல் செய்ததாகவும் மேல் நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுக்காது நிராகரித்து எனவும் கோத்தபாய தனது திருத்த மனுவில் கூறியுள்ளார்.

இதனால், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் சட்டவிரோதமானது என அறிவித்து தான் உட்பட குற்றம் சுமத்தப்பட்டவர்களை வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்து உத்தரவிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் இந்த மனுமீதான விசாரணைகள் முடிவடையும் வரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் அவன்கார்ட் தொடர்பான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி, தற்காலிக தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோத்தபாய, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோத்தபாய ராஜபக்ச சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வழக்கு தொடரப்பட்டுள்ள விதம் இலஞ்சம் தொடர்பான சட்டத்திற்கு முரணானது எனக் கூறியுள்ளார்.

இதன் காரணமாக கோத்தபாய தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க அனுமதி வழங்கி? கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை இடைநிறுத்தி, இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறபிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழக்கில் ஆஜரான அரச சட்டத்தரணி, வழக்கை விசாரிக்க அறிவிப்பை வெளியிடுவது சம்பந்தமாக எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை எனக் கூறியது. இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், மேற்படி தடையுத்தரவை பிறப்பித்ததுடன் வழக்கு சம்பந்தமான எதிர்ப்புகள் இருந்தால், அதனை ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டனர். இந்த திருத்த மனுமீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: