Wednesday, July 11, 2018

கூட்டமைப்பு தமிழர்களுக்கு ஒன்றையும் செய்ய வில்லை!

SHARE


தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சியாக இருந்து தமிழ் மக்களுக்கு எதனையும் கூட்டமைப்பு செய்யவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கத்தின் பங்காளி கட்சியாகவே கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி எனும் பெயரில் அரசின் பங்காளி கட்சியாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. எதிர்க் கட்சியாக இருந்து மக்களுக்கு எதனையும் செய்யவில்லை.



கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று தருமாறு கோரிய போது, தான் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு கோர மாட்டேன். அரசியல் தீர்வைதான் கோருவேன் என பதிலளித்து உள்ளார்.

ஆனால், இதுவரையில் தமிழ் மக்களுக்கு அவர் வேலை வாய்ப்புகளையோ , அரசியல் தீர்வையோ பெற்றுக்கொடுக்க வில்லை.

தொடர்ந்து தமிழ் மக்களை மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து இன,மத மக்களையும் ஏமாற்றி வருகின்றார். இந்த நாட்டு மக்களுக்காக எதிர்கட்சியாக இருந்து எதனையும் பெற்றுக்கொடுக்க வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் யுத்தம் நடந்தால் அதில் சண்டையிட்டு உயிரிழக்க போவது இளைஞர்கள் யுவதிகள் மட்டுமே. மீண்டும் அவ்வாறான ஒரு சூழலை உருவாக விடமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் எனக்கு வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: