Sunday, June 17, 2018

காவிரி ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

SHARE

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மத் திய அரசு திட்டத்தின்கீழ் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப் பின் 4-வது ஆட்சி மன்றக் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி பேசி யதாவது:
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், சமூக ரீதியாக வேறுபட்டுள்ளது. தேவைகளும் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. இவற்றை கருத்தில்கொண்டு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் சிறப்பான தலைமை யின் கீழ் இது சாத்தியமாகும் என நம்புகிறேன்.
நிலையான வேளாண்மை மற் றும் நீர் மேலாண்மை திட்டங்கள் இருந்தால்தான் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியும். விவசாயிகளின் வருவாய் அதிகரிக்க கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு. தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு ஆகியவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். தேசிய விவசாய இணையச்சந்தை, மண் வள அட்டை, நகர்ப்புற, கிராமப்புற சந்தைகளை ஒருங்கிணைத்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்ற திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் தண்ணீரை சேமிக்க கடந்த நிதியாண்டில் 20 ஆயிரம் தடுப்பணைகள், 250 கிமீ தொலைவுக்கு கற்களாலும் 15 ஆயிரம் கிமீ தொலைவுக்கு மண்களாலும் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வனத்துறையுடன் இணைந்து 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடி யில் 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்க நடப்பாண்டில் ரூ.328 கோடியே 95 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் பல முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 68 ஆயிரம் தாய்மார்களுக்கும் 6 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்படுத்தி வரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும்.
சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். விருதுநகரில் மாநில அரசு நிதியில் இயங் கும் பல் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக உள்ள காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு காந்திய தத்துவம் மற்றும் ஊரக மேம்பாட்டு சிறப்பு மையத்தை ரூ.500 கோடியில் அமைக்க வேண்டும். மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும்.
தமிழகம் அண்டை மாநிலங்களில் இருந்து பாயும் நதிகளை குறிப்பாக காவிரியை நம்பியுள்ளது. எனவே, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மகாநதி - கோதாவரி - கிருஷ் ணா - பெண்ணாறு, பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும். பம்பா, அச்சன்கோவில் நதிகளின் உபரி நீரை வைப்பாறு நதிக்கு திருப்பிவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதை செயல்படுத்த வேண்டும்.
நிதி ஆதாரத்தைப் பயன்படுத்துவதில் மாநிலங்களுக்கு, குறிப் பாக தமிழகத்துக்கு குறைந்த அளவு அதிகாரங்களே உள்ளன. பிரதமர் மோடியைத் தவிர மத்திய அரசில் உள்ள மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக் குப் பிறகு மாநில அரசின் வரு வாய் குறைந்துவிட்டது. சவா லான காலகட்டத்துக்கு ஏற்ப வளங்களை பங்கிட்டுக் கொள்ள புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மறைமுக வரி வருவாயை மாநிலங்களும் நேரடி வரி வருவாயை மத்திய அரசும் எடுத்துக் கொள்ளும் முறை வளர்ந்த நாடுகளில் உள்ளது. இதை நம் நாட்டிலும் செயல்படுத்தலாம். வரு மான வரி வசூலிக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். இது பல திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும். அதிகாரப் பகிர்வை எளிமைப்படுத்தவும் உதவும்.

ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு

மாநிலங்களுக்கு வழங்கப்ப டும் நிதிப் பகிர்வை 14-வது நிதி ஆணையம் 32-ல் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு நிதிப் பகிர்வு 4.9 சதவீத்தில் இருந்து 4.02 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்யப்படும் என 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனால், மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே, ஏற்கெனவே உள்ள முறைப்படி 1971-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படியே நிதிப் பகிர்வு செய்ய வேண்டும். மார்ச் 2018 வரை தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை ரூ.1,804 கோடி நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

பிரதமரை சந்திக்கவில்லை

நிதி ஆயோக் கூட்டம் முடிந்த தும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘‘தமிழகத்துக்கான முக்கிய கோரிக்கைகளை கூட்டத்துக்கு இடையே பிரதமரிடம் தனிப்பட்ட முறையிலும் விளக்கினேன். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதல்வர், அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து உதவி செய்து வருகிறது. போராடுபவர்களை அரசு ஒடுக்கி வருவதாகக் கூறுவது தவறு. மக்களுக்காக போராடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை’’ என்றார்.
SHARE

Author: verified_user

0 comments: